📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 10, 2026 03:34 AM

எஸ்பிஎச் மீடியா தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறார் கோ பூன் வான்

எஸ்பிஎச் மீடியா தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறார் கோ பூன் வான்

எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து 73 வயது திரு கோ பூன் வான் செப்டம்பர் 30ஆம் தேதி விலகுகிறார்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு சான் யெங் கிட், அதன் நிர்வாகத் தலைவர் பொறுப்பையும் ஏற்பார். எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதல் கிடைத்ததும் புதிய மாற்றம் அக்டோபர் 1ஆம் முதல் நடப்புக்கு வரும்.

“எஸ்பிஎச் செயல்பாடுகள் நிலைபெற்றுள்ளதால், இந்தத் திட்டப்பணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதற்கு இது சரியான தருணம்,” என்று தலைமைத்துவ மாற்றம் குறித்து திரு கோ புதன்கிழமை (செப்டம்பர் 9) தெரிவித்தார்.

“திரு சானின் தலைமையிலான நிர்வாகம், எஸ்பிஎச் மீடியாவின் இலக்கை சீரிய முறையில் முன்னெடுத்துச் செல்கிறது. அதன் உத்திபூர்வச் செயல்பாடுகளை மேம்படுத்தி, நிறுவனத்தின் மின்னிலக்க உருமாற்றத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது,” என்று திரு கோ குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் அச்சு, மின்னிலக்க வாசகர்களில் 10ல் ஒன்பது பேரை வார அடிப்படையில் எஸ்பிஎச் மீடியா அதன் பல்லூடகத் தளங்களின் மூலம் சென்றடைகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு எஸ்பிஎச் மீடியா நிறுவனம் அமைக்கப்பட்டபோது அதன் முதல் தலைவராக திரு கோ பொறுப்பேற்றார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் எஸ்பிஎச் மீடியா நிறுவனம் பல மாற்றங்களையும் சவால்களையும் வளர்ச்சியையும் கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஊடகங்களில் ஒன்றான தமிழ் முரசும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

தமிழ் முரசின் செயலி அறிமுகம் கண்டது, ‘இளைய தலைமுறை’ எனும் தளம் உருவாக்கப்பட்டது, ‘தப்லா!’ ஆங்கில வார இதழ் உருமாற்றம் கண்டது. தமிழ் ஊடகவியலாளரின் தொடர்ச்சியை உறுதிசெய்யும் உபகாரச் சம்பளமும் முரசுக்குத் தொடங்கப்பட்டது. புத்தெழுச்சி பெற்ற தமிழ் முரசு, சமூகத்துடன் இணைந்து 90ஆம் ஆண்டை 2025ஆம் ஆண்டு சிறப்புடன் கொண்டாடியது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

முக்கியமாக, மின்னிலக்கத் தளத்தில் எஸ்பிஎச் மீடியா ஊடகங்களின் வளர்ச்சி அதிவேகமாக இருந்தது.

தனியார் நிறுவனமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) அச்சுப் பிரதிகள் வீழ்ச்சியினால் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியபோது அதன் தொழில்முறைகளைச் சீரமைத்தது. சொத்துப் பிரிவு எஸ்பிஎச் நிறுவனத்திடம் இருக்க, ஊடகப் பிரிவு எஸ்பிஎச் மீடியா எனும் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (Company Limited by Guarantee) அமைக்கப்பட்டது. அரசாங்கத்தின் நிதி ஆதரவுடன் செயல்பட அது வகைசெய்தது.

2020ஆம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற திரு கோவுக்கு, மாற்றியமைக்கப்பட்ட நிறுவனத்தை வழிநடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர், போக்குவரத்து, தேசிய வளர்ச்சி, சுகாதார அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ள திரு கோ, 2003ல் சார்ஸ் பெருந்தொற்று, வீடமைப்புச் சவால், ரயில் பிரச்சினைகள் உள்ளிட்ட பல சவால்களைத் திறம்பட கையாண்டு ‘மிஸ்டர் ஃபிக்ஸ் இட்’ என்ற பெயர்பெற்றவர்.