📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health July 12, 2026 06:33 PM

வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவிற்கு மத்தியிலும் நம்பிக்கையூட்டும் திருஅவை

வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவிற்கு மத்தியிலும் நம்பிக்கையூட்டும் திருஅவை

வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவிற்கு மத்தியிலும் நம்பிக்கையூட்டும் திருஅவை

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 அன்று பேரழிவை ஏற்படுத்திய அடுத்தடுத்த இரு ஆற்றல் மிக்க நிலநடுக்கங்கள் இடம்பெற்று பதினைந்து நாட்கள் கடந்த நிலையில், லா குவைரா பகுதியில் உள்ள திருஅவை இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இந்த நிலநடுக்கத்தை "மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்திய அழிவு" என்று விவரித்த 'மரியாவின் மாசற்ற இதயம்' பங்கின் (Immaculate Heart of Mary) பங்குத்தந்தை அந்தோனியோ ரெல்லா அவர்கள், சில பகுதிகள் போர்க்களங்கள் போலக் காட்சியளிப்பதாகவும், கட்டிடங்கள் முற்றிலும் இடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் "உயிரிழந்தவர்களுக்காகத் துக்கத்தில் ஆழ்ந்துள்ள மக்கள் மத்தியில் பல குடும்பங்கள் இன்னமும் காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மன ரீதியான துயரத்துடன் சேர்த்து, பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடப்பதால், உயிர் பிழைத்தவர்கள் உணவு, தூய்மையான குடிநீர் மற்றும் நிலையான வருமானம் ஆகியவற்றின் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

பங்கு ஆலயம் சிறிய அளவிலான பாதிப்பை மட்டுமே சந்தித்திருந்தாலும், அது ஒரு முக்கிய நிவாரண மையமாக மாறியுள்ளது. இது அருள்பணியாளர்கள் ஒன்றுகூடும் இடமாகவும், மனிதநேய உதவிகளை பகிர்ந்தளிக்கும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

மறைமாவட்டம் மற்றும் பங்குத் தளங்களின் வழியாகத் தன்னார்வலர்களையும் அவசர உதவிகளையும் விரைவாக ஒருங்கிணைத்த 'வெனிசுலாவின் காரித்தாஸ்' அமைப்பின் துரிதமான செயல்பாட்டை அருள்பணி ரெல்லா அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பொருளுதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், துயரப்படும் குடும்பங்களுக்குத் திருஅவை ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியான ஆதரவையும் வழங்கி வருகிறது. ஆலயங்களை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் அவசியமானது என்று கூறிய அருள்பணி ரெல்லா அவர்கள், ஆலயங்கள் இறைவேண்டல், ஆறுதல் மற்றும் சமூகக் கூடுகைகளுக்கான இடங்களாக விளங்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், "ஊடகங்களின் கவனம் வெனிசுலாவை விட்டு நீங்கினாலும் வெனிசுலாவை மறந்துவிட வேண்டாம்" என்று அனைத்துலக சமூகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார். "நம்பிக்கை செயல்களை எளிதாக்குவதில்லை, ஆனால் அது நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கான வலிமையைத் தருகிறது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.