📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health July 12, 2026 08:52 PM

ஆந்திராவில் பரவும் கொரோனா; எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

ஆந்திராவில் பரவும் கொரோனா; எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

ஆந்திர மாநிலம் கடப்பாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் பலியாகியிருக்கிறார்கள். 60 வயது நபர், திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிறகு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 43 வயது நபர் ஒருவரும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பாதிப்பு

இதனையடுத்து, மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட அதிகாரிகளையும் எச்சரித்து உள்ளது. மாநிலம் முழுவதும் தயார்நிலை, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவசர உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மாநில கண்காணிப்பு அதிகாரி மூலம் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாவட்டங்களின் மருத்துவ சுகாதார அலுவலர்கள், அரசு பொது மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை

காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த தகவல் தள இணையதளத்தில் தாமதமின்றிப் பதிவு செய்யப்பட வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனைக் கருவிகள், முகக்கவசங்கள், கிருமி நாசினிகள், ஆக்ஸிஜன் மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அவசரகால போக்குவரத்து அமைப்புகள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகளின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதலுக்காக நியமிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். கொரோனா நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இந்தியாவில் 2022-ம் ஆண்டு கொரோனா பலி பதிவானது குறிப்பிடத்தக்கது.