வாய்ப்பு கிடைத்தால் ஐபிஎல் ஏலத்தை அழித்துவிடுவேன்.. புவனேஸ்வர் குமார் கருத்து
வாய்ப்பு கிடைத்தால் ஐபிஎல் ஏலத்தை அழித்துவிடுவேன்.. புவனேஸ்வர் குமார் கருத்து
மும்பை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆர்சிபி அணியின் முக்கிய வீரருமான புவனேஷ்வர் குமார், ஐபிஎல் ஏல முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த ஏல முறை வீரர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது ஆரம்பகால ஏலங்களின் போது, இந்திய அணியில் விளையாடத் தொடங்கியிருந்த போதிலும், தான் எவ்வளவு பதற்றமாக இருந்தேன் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புவனேஷ்வர் குமாரின் ஐபிஎல் பயணம் 2010 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் 6 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்துடன் தொடங்கியது. பின்னர் 2011 ஆம் ஆண்டு, புனே வாரியர்ஸ் இந்தியா அணி அவரை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. 2014 இல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 4.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. அங்கு பத்து ஆண்டுகள் விளையாடிய பிறகு, பல ஏலங்கள் மற்றும் தக்கவைப்பு ஒப்பந்தங்களைக் கடந்து, 2025 இல் மீண்டும் ஆர்சிபி அணியால் 10.75 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கப்பட்டார்.
இது குறித்து பேசிய புவனேஷ்வர் குமார், "இது வீரர்களுக்கு மிகப்பெரிய மன ரீதியான சுமையாகும். 2013-14 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்னை ஏலத்தில் எடுத்தபோது, நான் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனாலும் மனதளவில் கடுமையான பதற்றம் இருந்தது. நாம் வெளியில் சொல்லாவிட்டாலும், என்ன நடக்கும், என்ன நடக்காது?' என்ற கவலை மனதிற்குள் இருந்துகொண்டே இருக்கும்."
"இதை மனநல பாதிப்பு என்று சொல்ல முடியாது, ஆனால் ஒருவித கவலையுடனேயே இருக்க வேண்டியிருக்கும். இதைப் பற்றி பேசுவதில் பயனில்லை என்றாலும், என்னிடம் ஒரு வாய்ப்பு கொடுத்தால், நான் இந்த ஏல முறையை நீக்கிவிடுவேன். ஏனெனில் இது வீரர்களின் மனநிலைக்கு உகந்தது அல்ல" என்று கூறினார்.
மேலும், 2025 ஏலத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். அன்று அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். மைதானத்திற்குச் செல்வதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தனக்காக ஏலம் கேட்டுக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆட்டம் முடிந்து திரும்பிய போது ஆர்சிபி அணி தன்னை வாங்கியதை அறிந்தார்.
"ஆர்சிபி என்னை வாங்கியதாகச் சொன்னபோது நான் சற்று ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் ஏலத்தின் போது மற்ற இரு அணிகள் தீவிரமாக இருந்தன. ஆனால், அதன் பிறகு ஆர்சிபி நிர்வாகத்திடமிருந்தும், அதன் இயக்குநரிடமிருந்தும் எனக்கு வரவேற்பு செய்திகள் வந்தன."
"இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அதன் பிறகு ஆர்சிபி குழுவினரை முதன்முதலில் சந்தித்தபோது, அவர்களிடம் ஒரு எளிய அணுகுமுறை இருந்தது. 'வெற்றி பெற்றால் சிறந்தது, வெற்றி பெறவில்லை என்றாலும் இது மற்றொரு ஆண்டுதான்' என்ற மனநிலையில் அவர்கள் இருந்தனர்" என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்தார்.