IND vs AFG: உலகில் யாரும் செய்யாத சாதனை.. பும்ரா அபார ரெக்கார்ட்.. முதல் வீரர் என பெருமை
IND vs AFG: உலகில் யாரும் செய்யாத சாதனை.. பும்ரா அபார ரெக்கார்ட்.. முதல் வீரர் என பெருமை
டெல்லி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட்டின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகியவற்றில் சொந்த மண்ணில் தலா 50 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த 32 வயதான வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, இந்தியாவில் இதுவரை விளையாடியுள்ள 45 டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, அவர் இந்தியாவில் விளையாடிய 16 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும், 41 ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், பும்ரா தனது 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்த விக்கெட்டின் மூலம், இந்தியாவில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் ஒட்டுமொத்தமாக நான்காவது சர்வதேச பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்திய மண்ணில் அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அக்சர் படேல் முதலிடத்தில் உள்ளார். அவர் 57 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அர்ஷ்தீப் சிங் 55 விக்கெட்டுகளுடனும், ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 53 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய நிலையில், பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா 2 போட்டிகளிலும் கட்டுகோப்பாக பந்துவீசி தனது பார்மை நிரூபித்துள்ளார். அடுத்ததாக பும்ரா ஆசிய கோப்பையிலும், அதன் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.