TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள்
TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள்
தூத்துக்குடி, ஏரல் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் நள்ளிரவு ஆய்வு சர்ச்சை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மருத்துவர்கள், ஊழியர்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏரல் அரசு மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது இந்த நடவடிக்கைக்கு அரசு மருத்துவ சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் சங்கம் மட்டுமில்லாமல் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினரின் ஆய்வை நியாயப்படுத்தும் வகையிலும், ஏரல் அரசு மருத்துவமனையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும் ஸ்ரீவைகுண்டம் நகரின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை வெளிச்சுவர், குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி சுற்றுப்புறச் சுவர், கிளை நூலகச் சுவர் போன்ற பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்த அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுப் உள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நள்ளிரவு ஆய்வை நியாயப்படுத்தும் வகையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டிகளில், "ஏரலில் மருத்துவர் அலட்சியத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்" என்று கூறி நோயாளிகளை அலட்சியமாக அனுப்பி வைக்கின்றனர்.
மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல், செவிலியர்களை மட்டுமே கொண்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இதனால் ஏழை, எளிய பொதுமக்கள் இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு, வேறு வழியின்றி அதிக பணம் செலவழித்து தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
"இந்த விஷயத்தை சட்டமன்ற உறுப்பினர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? இது முற்றிலும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னை" எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் வன்மையான கண்டனம் எனவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஓய்ந்துபோன இந்த ஆய்வு சர்ச்சையை, தற்போது ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகளால் மீண்டும் சூடான விவாதப் பொருளாக மாற்றியுள்ளது. அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டு சுமத்தி ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டி பிரசாரம், அப்பகுதி அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நள்ளிரவு ஆய்வு பணியை நியாயப்படுத்த அரசு மருத்துவமனையின் செயல்பாட்டைக் குறை கூறி தமிழக வெற்றிக் கழகத்தினரே இந்தச் சுவரொட்டிகளை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டி வருவது பொதுமக்களிடையே பேசும் பொருளாகி உள்ளது.