நோபல் பரிசு வென்ற தமிழ் வம்சாவளி
2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் (நவி) பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
யார் இந்த நவநீதம் பிள்ளை?
நவநீதம் பிள்ளை 1941-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந்தேதி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள கிளேர்வுட் பகுதியில் பிறந்தார். இவரது தாத்தா, பாட்டி 19-ம் நூற்றாண்டில் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்களாகத் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்
வறுமையான குடும்பப் பின்னணியில் வளர்ந்த நவநீதம் பிள்ளையின் தந்தை பஸ் டிரைவராகப் பணியாற்றினார். பல்வேறு சவால்களுக்கு இடையிலும் கல்வியில் கவனம் செலுத்திய அவர், டர்பனில் உள்ள பில்லே நடால் பல்கலைக்கழகத்தில் பயின்று, 1963-ல் இளங்கலைப் பட்டத்தையும் (BA), 1965-ல் சட்ட இளங்கலைப் பட்டத்தையும் (LLB) பெற்றார். பின்னர், 1982-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தையும் (LLM), 1988-ல் சட்ட அறிவியல் முனைவர் பட்டத்தையும் (Doctor of Juridical Science) பெற்றார்.
இனவெறிக்கு எதிராக சட்டப் போராட்டம்
தென் ஆப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி நிலவிய காலகட்டத்தில், நிறவெறியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நவநீதம் பிள்ளை சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
1967-ம் ஆண்டு, நடால் மாகாணத்தில் சொந்தமாக சட்ட அலுவலகம் தொடங்கிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இனவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள், அரசியல் கைதிகள் உள்ளிட்டோருக்காக வாதாடினார்.
காவலில் இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் சித்ரவதைகள், தனிமைச் சிறைவாசம் மற்றும் கைதிகளின் உரிமைகள் தொடர்பான வழக்குகளிலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். 1995-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் வெள்ளையரல்லாத பெண் என்ற பெருமையை பெற்றார்.
ருவாண்டா இனப்படுகொலை தீர்பாயத்தில் முக்கியப் பங்கு
ருவாண்டாவில் 1994-ல் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக நவநீதம் பிள்ளையை ஐ.நா. பொதுச்சபை தேர்ந்தெடுத்தது. அவர் எட்டு ஆண்டுகள் தீர்ப்பாயத்தில் பணியாறியதுடன், 1999 முதல் 2003 வரை அதன் தலைவராகவும் இருந்தார்
ருவாண்டா இனப்படுகொலை வழக்கில் பாலியல் வன்முறையும், குறிப்பிட்ட ஒரு இனக்குழுவை அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டால், அது இனப்படுகொலையின் ஒரு பகுதியாகக் கருதப்படலாம் என்பதை உறுதிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஜீன் பால் அகாயேசு வழக்குதீர்ப்பில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
இந்த தீர்ப்பு சர்வதேச குற்றவியல் சட்டத்திலும், பாலியல் வன்முறையை ஒரு கொடூர குற்றமாக அங்கீகரிப்பதிலும் முக்கிய முன்னேற்றமாக இது அமைந்தது.பின்னர், 2003 முதல் 2008 வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர்
2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராக நவநீதம் பிள்ளை பொறுப்பு வகித்தார்.
இந்தக் காலகட்டத்தில், பெண்களின் உரிமைகள், இனப் பாகுபாடு, ஆயுத மோதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளில் சர்வதேச அளவில் குரல் கொடுத்தார்.
1992 ஆம் ஆண்டு மனித உரிமை கட்டமைப்பில் பெண்களின் உரிமைகளை மேலும் உறுதியாக நிலைநிறுத்துவதற்காக வ்ழக்கறிஞர்க்ளுடன் இணைந்து ஈக்வாலிட்டி நவ் (Equality Now) என்ற அமைப்பை நிறுவினார்
காசா விவகாரத்திலும் விசாரணைக் குழுத் தலைவராகச் செயல்பட்டவர்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா. சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவின் தலைவராக 2021-ம் ஆண்டு நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டார்.
2025-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான அந்தக் குழுவின் அறிக்கை, காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக முடிவு செய்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் நிராகரித்தது. அந்த அறிக்கை நீதிமன்றத் தீர்ப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதாக காம்பியா தொடர்ந்த வழக்கில், சர்வதேச நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதியாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். 2019ல் முறையாக அந்தப் பொறுப்பில் நீதிபதியாக பொறுப்பேற்றார்
வறுமையான குடும்பத்தில் பிறந்து, இனவெறிக்கு எதிராகப் போராடி, சர்வதேச நீதித்துறையில் முக்கியப் பொறுப்புகளை வகித்து, தற்போது அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள நவநீதம் பிள்ளையின் பயணம் உலகம் முழுவதும் மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.