📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 28, 2026 06:01 PM

தட்டி கேட்க ஆளில்லை என்ற தைரியம்.. இன்ஃப்ளூயன்ஸர்கள் & சினிமா ரிவ்யூவர்களை விளாசிய ராதிகா சரத்குமார்

தட்டி கேட்க ஆளில்லை என்ற தைரியம்.. இன்ஃப்ளூயன்ஸர்கள் & சினிமா ரிவ்யூவர்களை விளாசிய ராதிகா சரத்குமார்

சென்னை: தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடச் சின்னத்திரை மற்றும் ஓடிடி உலகத்தை ஒன்றிணைக்கும் உயரிய நோக்கில் 'TOPCOS' (Television & OTT Producers Council of South) என்ற புதிய அமைப்பை பிரபல மூத்த நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் அவர்கள் முன்னின்று தொடங்கி வைத்துள்ளார்.

இந்தத் தொடக்க விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதிகா, தற்காலத்தில் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் எல்லை மீறிச் செயல்படுவது குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில், டிஜிட்டல் மீடியா வளர்ந்த பிறகு, இந்த இன்ஃப்ளூயன்ஸர்ஸ் திரைப்படங்களை பற்றியோ, அதில் நடிக்கும் நடிகர்களை பற்றியோ, பெண்களை பற்றியோ அல்லது அவர்களின் குடும்பங்களை பற்றியோ மிகவும் மோசமாக பேசுவது ரொம்பவே ஈஸியா போச்சு. ஏன்னா, அவங்களை கேள்வி கேட்கவோ, தட்டி கேட்கவோ யாருமே இல்லைங்குற தைரியம். இந்த மாதிரி தவறுகளுக்கு எதிராக நாங்களெல்லாம் குரல் கொடுத்திருக்கிறோம், பெரிய சண்டைகளும் வந்திருக்கிறது. அரசு இந்த விஷயத்தில் ரொம்பவே 'ஸ்ட்ரிக்ட்' ஆக ஆக்ஷன் எடுக்க வேண்டும். இந்த மாதிரி ஆட்களில் இரண்டு மூன்று பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலே எல்லாமே சரியாகிவிடும்.

ரிவ்யூவர்கள் மீது அதிரடி தாக்கு: சினிமா விமர்சனங்கள் என்ற பெயரில், இப்போது திரைப்படங்களை பற்றி ரிவ்யூ செய்வது யார் கையிலும் கட்டுப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது. இது உலகம் முழுவதுமே ஒரு பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. குறிப்பாக நம்ம ஊரில் இது ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு. ஏன்னா... எல்லாருக்கும் கையில் ஃப்ரீயா ஒரு ஃபோன், ஃப்ரீ டேட்டா, ஃப்ரீ வைஃபை கிடைச்சிருது. எங்கெங்கோ உட்கார்ந்துகொண்டு என்னென்னவோ பேசுகிறார்கள்.

நடவடிக்கை எடுங்க: ஆனால், அதையும் மீறி நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. சில நேரங்களில் படங்கள் நன்றாக இருந்தாலும் கூட, 'நல்லா இல்லை' என்று வேண்டுமென்றே தவறான ரிவ்யூஸ் பரப்புகிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரியது. இதை சட்டப்படியும் அமைப்பு ரீதியாகவும் மிக கடுமையாக கையாள வேண்டும் என தமிழ் குமரன் சார் அவர்களிடம் நான் இதை வலியுறுத்தியிருக்கிறேன். இதை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக நீங்கள் பார்க்க வேண்டும், இல்லையென்றால் இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போய்விடும் என்று ராதிகா சரத்குமார் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.