தொழில்நுட்ப விதிமுறைகளில் ஒரு சில நாடுகள், பெருநிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது: விவியன், சிங்கப்பூர் செய்திகள்
அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கும் விதிமுறைகளில் ஒரு சில சக்திவாய்ந்த நாடுகள், பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக இணையப் பாதுகாப்பு வார மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இக்கருத்துகளை முன்வைத்தார்.
போரிலும் உலகளாவிய அரசதந்திர உறவுகளிலும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி அமைச்சர் பேசினார்.
ஒரு சிறிய நாடு என்ற அடிப்படையில், உலக அளவில் எட்டப்படும் அனைத்துலகக் கருத்திணக்கத்தில் சிறிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் உட்பட அனைத்து இறையாண்மை கொண்ட உலக நாடுகளின் குரல்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் சிங்கப்பூர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக அமைச்சர் விவியன் குறிப்பிட்டார்.
வல்லரசு நாடுகள் உட்பட எந்த நாடும் தொழில்நுட்பத்தைத் தனியுரிமையாக வைத்திருக்க முடியாது என்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடுகளுக்கு இடையே எப்போதும் ஒருவித பரஸ்பர சார்ந்திருத்தல் நிலவும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிவேகமாக உயர்ந்து வரும் நிலையில், அதனைச் சரியான முறையில் நிர்வகிக்கும் நிர்வாகத் திறனை விடத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக உள்ளதாக அமைச்சர் விவியன் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அனைத்துலக அளவில் திறம்பட நிர்வகிக்கும் திறன் வேகமெடுக்காதபோதிலும் தேசியப் பாதுகாப்பு, அனைத்துலகச் சட்டம், ஆயுதப் பயன்பாடு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் இறுதிப் பொறுப்பு அரசாங்கங்களுக்கே உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.