தமிழகத்தில் நடப்பாண்டில் 21,655 பேருக்கு தற்போது வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு
தமிழகத்தில் நடப்பாண்டில் 21,655 பேருக்கு தற்போது வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அமைச்சர் தகவல்
சென்னை: நடப்பு ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ் , டெங்குவால் இந்த ஆண்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் தலைநகர் சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தினசரி சராசரியாக 200 பேருக்கு புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தாலும், பாதிப்பு ஒரேடியாக இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரிக்கவில்லை. இதனால் நோய் பரவல் தற்போதைய நிலையில் ஓரளவுக்குக் கட்டுக்குள்ளேயே இருப்பதாகவும் கூறியுள்ளார். கொசு ஒழிப்புப் பணியாளர்களை சில வீடுகளில் அனுமதிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. கொசுப் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம், எனவே மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். சென்னையை பொறுத்த வரை 3,700 பேர் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு முயற்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் கூறினார்.