📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 08, 2026 02:03 PM

சிங்கப்பூர் வங்கிகளின் பங்கு விலை சரிவு தொடர்கிறது

சிங்கப்பூர் வங்கிகளின் பங்கு விலை சரிவு தொடர்கிறது

சிங்கப்பூரின் உள்ளூர் வங்கிகளான டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகியவற்றின் பங்கு விலைகள் அண்மையில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளன. வியாழக்கிழமை (அக்டோபர் 8) நண்பகல் வாக்கில், ஓசிபிசி பங்கு விலை 4.29 விழுக்காடு சரிந்து $29ஆகக் குறைந்த வேளையில், 14.9 மில்லியனுக்கும் அதிகமான பங்குகள் கைமாறின.

டிபிஎஸ் பங்கு விலை 4.48 விழுக்காடு சரிந்து $74.02ஐ எட்டியதுடன், 9.6 மில்லியனுக்கும் அதிகமான பங்குகள் வர்த்தகமாயின. யுஓபி பங்கு விலை 4.92 விழுக்காடு சரிந்து $40.35ஆகக் குறைந்த வேளையில், 4.14 மில்லியன் பங்குகள் கைமாறின.

லாபத்தைப் ரொக்கமாக்கும் முதலீட்டாளர்களின் நடவடிக்கை, வருவாய் குறித்த எதிர்பார்ப்புகளில் ஏற்பட்டுள்ள கவலை, உலகளாவிய பத்திரச் சந்தைகளின் கொந்தளிப்பு ஆகியவையே இந்தச் சரிவுக்குக் காரணம் என்று சாக்சோ நிறுவனத் தலைமை முதலீட்டு உத்தியாளர் சாரு சனானா தெரிவித்தார்.

ஓசிபிசி வங்கியின் மூன்றாம் காலாண்டு வருவாய் எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும் எனக் கூறி, சிட்டி நிறுவனம் அதன் பங்குகளை ‘விற்பனை’ நிலைக்கு மாற்றியது.

மேலும், சிங்கப்பூர் வெள்ளி வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிக நம்பிக்கை கொண்டவையா என்றும் செல்வ மேலாண்மை வருவாயை வங்கிகளால் தொடர்ந்து தக்கவைக்க முடியுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

உலகளாவிய பத்திர வருவாய் உயர்வும் கடன் தேவை, பத்திர முதலீடுகளைப் பாதிக்கக்கூடும். இருப்பினும், வங்கிகளின் வலுவான மூலதன நிலை, ஈவுத்தொகை ஆதரவு காரணமாக, இது நீண்டகால வீழ்ச்சியாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதங்கள் உயர்வது நிதி திரட்டும் செலவை அதிகரிப்பதால், அது வங்கிகளுக்கு முழு நன்மையையும் தராது என்று டைகர் புரோக்கர்ஸ் சந்தை உத்தியாளர் ஜேம்ஸ் ஓய் குறிப்பிட்டார். அதேவேளையில், சிஎம்சி மார்க்கெட்ஸ் விற்பனை வர்த்தகர் யூஜின் கோ, வங்கிகளின் வலுவான நிதி நிலைமை நிதி நெருக்கடியைத் தடுக்கும் என்றார்.