தமிழக்கத்தில் மின் வெட்டு.! இது தான் லாஸ்ட்
தமிழகத்தில் மின் வெட்டு.! இது தான் லாஸ்ட்- மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tneb circular : மின்தடை, மின்மாற்றி செயலிழப்பு, கேபிள் பழுது உள்ளிட்ட முக்கிய மின் கோளாறுகள் தொடர்பான தகவல்களை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தொடரும் மின் வெட்டு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் விஜய் தொகுதியான பெரம்பூர், முகப்பேர், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட பல இடங்களில் தொடரும் மின்தடையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் மின் வெட்டு தொடர்பாக மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் போது உரிய பதில் அளிக்காத நிலையானது நீடித்து வருகிறது. மேலும் புகார் அளிக்கும் பொதுமக்களிடம் மரியாதை குறைவான வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கோடை காலங்களில் மின் தேவை அதிகரிக்கும் நிலையில், மழைக்காலங்களில் கடைப்பிடிக்கப்படும் அதே அளவிலான விழிப்புணர்வு மற்றும் துரித நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
மின்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நுகர்வோர் எண்ணிக்கை, கோளாறுக்கான காரணம், மீட்பு பணிகளின் முன்னேற்றம் மற்றும் மின் விநியோகம் சீராகும் காலம் உள்ளிட்ட விவரங்களை முறையாக பகிர வேண்டும். மின் கோளாறுகள் குறித்து சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியாகிய பிறகோ அல்லது பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மூலம் தகவல் கிடைத்த பிறகோ மட்டுமே உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்வது ஏற்க முடியாது.
அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளித்து மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகள் மற்றும் மின் விநியோகம் மீட்கப்பட்ட நிலை தொடர்பான புகைப்படங்கள், கள அறிக்கைகள் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு உடனுக்குடன் பகிர வேண்டும் என்றும்,
முக்கிய மின்தடைகள் மற்றும் கோளாறுகள் ஏற்பட்டால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பதால், மாற்று மின் விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அடிப்படை கோளாறை 24 மணி நேரமும் தொடர்ந்து சரிசெய்து நிரந்தரமாக மின் விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி