டெல்லி போராட்டத்தில் பலர் கைது; ஐநா கவலை
ஜெனீவா: டெல்லியில் சனிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டது குறித்து ஐநா மனித உரிமைகள் அமைப்பு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
ஆனால் ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தரத் தூதரகம், ஐநாவின் இந்தக் கவலைகள் தவறானவை, நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளன என்று கூறி அக்கூற்றை நிராகரித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ‘ஜென் ஸி’ அமைப்பான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தைப் பாதுகாப்புப் படையினர் தடுத்துநிறுத்தி நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறி தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்ய வலியுறுத்தியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையமும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் மறுத்துள்ளன.
இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான தமீன் அல்-கீத்தன் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், போராட்டத்திற்கு முன்னரும் போராட்டத்தின்போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் பேரெண்ணிக்கையில் கைது செய்யப்பட்டது தொடர்பான செய்திகள் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்தியாவின் ஜனநாயக மரபுகள், மனித உரிமைப் பொறுப்புகளுக்கு ஏற்ப அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களிடம் பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.
போராட்டக்காரர்கள் எழுப்பும் கவலைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகள் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அல்-கீத்தன் கேட்டுக் கொண்டார்.
டெல்லியின் மத்திய வட்டாரத்தில் போராட்டங்களுக்குப் பிரபலமான ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த சிஜேபி திட்டமிட்டிருந்தது. இருப்பினும், டெல்லி காவல்துறை இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை மறியல்கள் மூலம் பெரும்பாலான போராட்டக்காரர்கள் நிகழ்விடத்தை அடைய முடியாமல் செய்யப்பட்டது.
சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, மற்ற இரு தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரான்கா ஆகியோர் மும்பையிலிருந்து புறப்பட்ட அவர்களின் விமானம் டெல்லியில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களின் கைதுகுறித்து டெல்லி காவல்துறை இதுவரை பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.