ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
ஜெருசலேம்: கேப்டன் ஸ்மிட் மச்சார், நீங்கள் இஸ்ரேல், இந்தியா மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் பாராட்டி உள்ளார்.
துபாயில் இருந்து டெல்அவிவ் நகருக்கு சென்ற பிளைதுபாய் விமானத்தை கைப்பற்றி விபத்தை ஏற்படுத்த முயற்சி நடந்தது. இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை ஓமன் நாட்டு துணை விமானி ஹம்மாம் அல ஹம்மாமி கடுமையாக தாக்கினார். ஆனாலும் ரத்த வெள்ளத்திலும் துணிச்சலுடன் செயல்பட்டு இந்திய விமானி சதி முயற்சியை முறியடித்தார். ஸ்மிட் மச்சாரின் வீர தீர செயலை உலகமே பாராட்டி வருகிறது.
பல உயிர்களை காப்பாற்றிய விமானி ஸ்மிட் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருதான குடிமக்கள் வீர தீர செயலுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்படும் என அந்நாட்டின் அதிபர் ஹெர்சாக் அறிவித்தார். ஸ்மிட் மச்சார் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார். தற்போது இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ''கேப்டன் ஸ்மிட் மச்சார், நீங்கள் இஸ்ரேல், இந்தியா மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன்.
வார இறுதியில் நீங்கள் பெற்றுக்கொண்ட எனது கடிதத்தில், நீங்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அக்கடிதத்தில் நான் குறிப்பிட்டது போலவே, நீங்கள் உடல்நலம் தேறியதும் உங்களை இஸ்ரேல் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இஸ்ரேல் மக்களின் சார்பாக, மிக உயரிய விருதான குடிமக்கள் வீர தீர செயலுக்கான ஜனாதிபதி விருது உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமை கொள்வேன்'' என குறிப்பிட்டுள்ளார்.