📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 02:02 PM

தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. 5 சதவீதம் குறைவா? திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. 5 சதவீதம் குறைவா? திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. 5 சதவீதம் குறைவா? திமுக குற்றச்சாட்டு - தவெக விளக்கம்!!

தமிழ்நாட்டின் செப்டம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் (Gross GST) முந்தைய ஆண்டை விட 5% சரிந்து ₹10,188 கோடியாகக் குறைந்ததாக அண்மையில் புள்ளிவிவரங்கள் வெளியாகின. இதனை அடிப்படையாக வைத்து, எதிர்க்கட்சியான திமுக, தவெக அரசு மீது கடுமையான பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. குறிப்பாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 மாதங்களாக உள்நாட்டு ஜிஎஸ்டி வரி வசூல் சரிவடைந்து வருகிறது எனவும் இது தற்போதைய தவெக அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி மற்றும் தமிழ்நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரம் நலிவடைந்து வருவதையே காட்டுகிறது எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தச்சூழலில் தான், GST 5% சரிவு… தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி” என்று கடந்த சில நாட்களாக திமுகவினரின் அரைவேக்காட்டு பிரச்சாரத்தின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தவெக பதிலடி கொடுத்திருக்கிறது. இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”Gross GST-ஐ மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்களை, அதிகாரப்பூர்வத் தரவு நறுக்கென்று குட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் 16.1% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியிருக்க, “5% குறைந்துவிட்டது” என்று மட்டும் கூறி பொருளாதாரம் வீழ்ச்சி, அரசு நிர்வாகத் தோல்வி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகியுள்ளது.

உற்பத்தி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், IGST Settlement உள்ளிட்ட பல்வேறு காரணிகள் Gross GST எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டின் உண்மையான GST வருவாய் நிலையை மதிப்பிடும்போது Post-Settlement GST தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.