வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய சமூக மையம்: இரட்டிப்பு மகிழ்ச்சி
வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூர்ச் சமுதாயமும் ஒன்றாகப் பயணம் செய்யவும், பழகவும், கொண்டாடவும் மேலும் ஒரு நிரந்தர இடம் உருவாகி ஊழியர்களின் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காகச் செயல்படும் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அறநிறுவனம் இனி இருமடங்கு ஊழியர்களுக்குச் சேவை வழங்கும் வகையில் 217 ஹெண்டர்சன் சாலையில் உள்ள தனது வளாகத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கற்றல், பொழுதுபோக்கு, சமூக நடவடிக்கைகளுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் இலக்குடன் ‘கேத் ஐஆர்ஆர்’ எனும் அதன் முதல் சமூக மையத்தையும் நிறுவியது ‘ஐஆர்ஆர்’.
இதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் பல ஆண்டுகளாக இயங்கி வரும் அந்த அறநிறுவனத்தின் இலவசக் கடையான ‘இன்ஸ்பையர் ஸ்டோர்’ சேவையின் பரப்பளவும் இரட்டிப்பாகியது.
ஏறத்தாழ, 900 சதுர அடியாக இருந்த அந்தக் கடை தற்போது 1,300 சதுர அடியாக மேம்பாடு கண்டுள்ளது. இது குறித்து ‘ஐஆர்ஆர்,’ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விரிவாக்கம் 44 விழுக்காட்டு வளர்ச்சி என்றும், இதனால் மாதந்தோறும் 400 பேருக்கு வழங்கப்பட்டு வந்த விற்பனைச் சேவை, இனி 800 பேருக்கு வழங்கப்படும் என்றும் விவரித்தது.
விழாவில் பேசிய ‘ஐஆர்ஆர்’ நிறுவனர் தீபா சுவாமிநாதன், ‘‘சிங்கப்பூரில் ஏறத்தாழ 1 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவது என்பது அத்தனை சுலபமன்று.
‘‘ஒவ்வொரு மாதமும் 800 பேர்வரை உதவி செய்தாலும், அனைத்து ஊழியர்களையும் சென்றடைய நீண்ட காலம் பிடிக்கும். அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த முயற்சி கடலில் ஒரு துளி போன்றதுதான். என்றாலும், அந்தத் துளிகள் பல சேர்ந்ததுதான் ஒரு பெருங்கடல்,’’ என்று கூறினார்.
இந்த நிலையத்திற்குப் பல ஆண்டுகளாக வருகையளித்து பயனடைந்துவரும் வெளிநாட்டு ஊழியர் நாகப்பன் சிவா, 38, “முன்பு 100 பேர் வந்தாலே நெரிசல் ஏற்படும். ஆனால் சமுதாயக்கூடத்துடன் விரிவடைந்துள்ளதால் இனி 300 பேர்வரை தாராளமாக கூடலாம். இங்கு இலவசமாகக் கிடைக்கும் உயர்தரக் காலணிகள், பைகள், ஆடைகள், அன்றாட அத்தியாவசியப் பொருள்களால் எங்களின் பெரும் பணம் மிச்சமாகிறது,” என்று தெரிவித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இது குறித்துக் கருத்துரைத்த மற்றுமோர் ஊழியரான சுப்ரமணி சுரேஷ்குமார், 40, ‘‘கொவிட் முடக்கக் காலத்தில் யாருமே வெளியே வர முடியாத சூழலில், ‘ஐஆர்ஆர்’ தொண்டூழியர்கள் எங்களைத் தேடி வந்ததை மறக்கவியலாது.
‘‘பொதுவாக உள்ளூர்வாசிகளுக்கும் எங்களுக்குமிடையே ஓர் இடைவெளி இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு; ஆனால் இந்த அமைப்பு அந்த இடைவெளியை அகற்ற எடுத்துவரும் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது,’’ என்றார்.