📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 19, 2026 10:34 AM

ஸ்காட்ஸ் ரோடு சோதனை: $180,000 மதிப்பிலான போலி ஆடம்பரப் பொருள்கள் பறிமுதல்

ஸ்காட்ஸ் ரோடு சோதனை: $180,000 மதிப்பிலான போலி ஆடம்பரப் பொருள்கள் பறிமுதல்

சிங்கப்பூரின் ஸ்காட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டில் புதன்கிழமை (செப்டம்பர் 16), காவல்துறை திடீர்ச் சோதனை நடத்தியது.

ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் போலியான ஆடம்பரப் பொருள்களை விற்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண்கள் இருவரை அது கைதுசெய்துள்ளது.

அந்தப் பெண்களின் வயது 39 மற்றும் 54 என்று காவல்துறை வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்தக் கடைகளிலிருந்து ஆடம்பரப் பைகள், கடிகாரங்கள், ஆடைகள், காலணிகள், அணிகலன்கள் உட்பட 900க்கும் மேற்பட்ட போலிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொருள்களின் சந்தை மதிப்பு $180,000க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வணிக நோக்கத்திற்காக போலிப் பொருள்களை வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால், $100,000 வரையிலான அபராதம், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அறிவுசார் சொத்துரிமை மீறல்களைக் காவல்துறை கடுமையாகக் கருதுகிறது. சட்டபூர்வ வணிகங்களுக்கும் பயனாளர்க்கும் பாதிப்பு ஏற்படுத்தி லாபம் ஈட்டுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அது எச்சரித்துள்ளது.