📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 19, 2026 11:34 AM

கனடாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது பற்றி சிங்கப்பூர் பரிசீலனை

கனடாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது பற்றி சிங்கப்பூர் பரிசீலனை

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களால் உலகின் முக்கிய வழித்தடங்களில் எரிபொருள் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்படுவதை மீண்டும் எதிர்பார்க்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

கத்தாரின் டோஹா, கனடாவின் ஒட்டாவா நகரங்களுக்கான பயணத்தின் முடிவில் டாக்டர் விவியன் சனிக்கிழமை (செப்டம்பர் 19) செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கனடாவிலிருந்து எரிசக்தி, உணவு பொருள்களை இறக்குமதி செய்யும் சாத்தியம் குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரின் முக்கிய விநியோக நாடான கத்தாரிலிருந்து திரவநிலை இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய ஹோர்முஸ் நீரிணை மூடல் மிகப்பெரிய தடையாக உள்ளது என்றார் திரு விவியன்.

பன்முனைகளிலிருந்து எரிபொருள், உணவுப் பொருள்கள் தருவிக்கப்படுவதால் சிங்கப்பூர் தற்போதுவரை நிலைமையைச் சமாளித்துள்ளது. இருப்பினும், சவூதி அரேபியாவின் ஏற்றுமதியைப் பாதிக்கக்கூடிய பாப் எல்-மண்டெப் நீரிணையைச் சுற்றியுள்ள பிரச்சினைகளால் தடை ஏற்படும் சாத்தியமுள்ளதாக அவர் கூறினார்.

“மத்திய கிழக்கிலிருந்து தருவிக்கப்படும் எரிபொருள் விநியோகத்தில் மேலும் இடையூறுகள் ஏற்படக்கூடும். சிங்கப்பூர், இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து, தகுந்த பங்காளிகளுடன் இணைந்து செயல்படும்,” என்று அமைச்சர் விவியன் மேலும் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருள்களின் வணிகத்திற்காகக் கனடாவுடன் முறையான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளைச் சிங்கப்பூர் பரிசீலித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கப் பொருளியல், மின்னிலக்கப் பரிவர்த்தனை போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகளையும் இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இவை அனைத்துமே தொடக்கநிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் கையெழுத்திடுவதற்கு ஏதுவாகச் சில ஒப்பந்தங்கள் தயாராகலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தமது பயணத்தின்போது, டாக்டர் விவியனும் கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தும் ஒரு பொருளியல் நிர்வாக அமைப்பை நிறுவ வழிவகுக்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர்.