பொதுமக்களிடம் யுபிஐ கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க புதிய கண்காணிப்பு நடைமுறை
புதுடெல்லி: பொதுமக்களிடம் ஒரு காசுகூட ‘யுபிஐ’ கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அதனை உறுதிசெய்ய புதிய கண்காணிப்பு நடைமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்திய நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் 2016ஆம் ஆண்டு யுபிஐ மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதுவரை கூகல்பே, போன் பே, பேடிஎம், பீம், அமேசான் பே உள்ளிட்ட யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், தேசியப் பணப் பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) செப்டம்பர் 16ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ரூ.2,000க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 விழுக்காடு வரை கட்டணம் விதிக்கப்படும். அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்தப் புதிய நடைமுறை நடப்பிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று என்பிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வணிகர்களுக்கான யுபிஐ கட்டண விவரமும் முன்கூட்டியே வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி, ரூ.2,000 வரையிலான வணிக யுபிஐ பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் கிடையாது. அதற்குமேல் ரூ.3,000 வரை ரூ.12, ரூ.50,000 வரை ரூ.200, ரூ.75,000க்குமேல் ரூ.300 கட்டணத்தை வணிகர்கள் செலுத்த வேண்டும் என்று என்பிசிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சு வட்டாரங்கள், “வணிகர்களுக்கான யுபிஐ புதிய கட்டண நடைமுறை அக்டோபர் 15ஆம் தேதி நடப்பிற்கு வருகிறது. பொதுமக்களிடம் அக்கட்டணம் வசூலிக்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டாலும் யுபிஐ கட்டணத்தை வணிகர்கள் தங்கள்மீது சுமத்துவர் என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்க புதிய கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த மத்திய நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது,” என்று கூறின.
அவ்வகையில், வணிகர்களின் யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகள் நாள்தோறும் கண்காணிக்கப்படும். குறிப்பாக ரூ.2,000க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்படும். இதன்மூலம் யுபிஐ கட்டணத்தைப் பொதுமக்கள்மீது வணிகர்கள் சுமத்துவது முழுமையாக தடுக்கப்படும்.
பொதுமக்களிடம் யுபிஐ கட்டணம் வசூலிப்பது குற்றம் என்றும் மீறி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, பெட்ரோல், கைப்பேசி, காப்பீடு, பள்ளி, கல்லூரிக் கட்டணங்கள் சார்ந்த வணிக யுபிஐ பரிவர்த்தனையின்போது பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்.
அந்தப் புகார்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விரிவான கண்காணிப்பு நடைமுறை வரையறுக்கப்படும் வேளையில், முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது.
நாடு முழுவதும் ஏறத்தாழ 86 விழுக்காட்டு யுபிஐ மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனைகள் தனிநபர்களுக்கு இடையில் நடைபெறுகின்றன. வணிகம் சார்ந்து 14 விழுக்காட்டு யுபிஐ பரிவர்த்தனைகள் மட்டுமே நடைபெறுகின்றன. எனவே, புதிய கட்டண நடைமுறையால் யுபிஐ பரிவர்த்தனைகள் எந்த வகையிலும் குறையாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.