புதுமைகளைப் புகுத்தி தெங்கா பிடிஓ வீடுகளைக் கட்டி முடித்துள்ள வீவக
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), புதுமையான வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு பிடிஓ (தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள்) கட்டுமானத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
பொது வீடமைப்புக் கட்டடங்கள் கட்டப்படும் முறையை மாற்றியமைக்கும் நோக்கத்தில் புதிய தொழில்நுட்பங்களையும், நவீன கட்டுமான முறைகளையும் கழகம் புகுத்தி வருகிறது.
இதன் பலனாக ஜூன் மாதத்தில் ‘கார்டன் வாட்டர்ஃபிரண்ட்-2@தெங்கா’ கட்டுமானத் திட்டம் நிறைவடைந்துள்ளது.
இது, உற்பத்தித்திறனை உயர்த்தும் புதுமை, தொழில்நுட்பங்களின் முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட வீவகவின் முதலாவது கட்டுமான மாற்றுத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் உருவாகும் இரண்டாவது பிடிஓ திட்டமான ‘கார்டன் வாட்டர்ஃபிரண்ட்-1@ தெங்கா’ 2026ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு தெங்கா திட்டங்களும், ஒரு நாள் மனித உழைப்புக்கு 0.6 சதுர மீட்டர் என்ற அடிப்படை உற்பத்தித்திறன் விகிதத்தைவிட, கட்டுமானத் தள உற்பத்தித்திறன் 25 விழுக்காடு முன்னேற்றப் பாதையில் இருப்பதாக வீவக சனிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்தமாகக் கட்டப்பட்ட தரைப்பகுதியை (சதுர மீட்டரில்), தளத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையால் (மனித-நாள்) வகுப்பதன் மூலம் தள உற்பத்தித்திறன் கணக்கிடப்படுகிறது.
ஒரு நாள் மனித உழைப்பு என்பது ஒரு தொழிலாளி ஒரு நாளில் முடிக்கக்கூடிய வேலையைக் குறிக்கிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கட்டுமான மாற்றுத் திட்டம், 2022ல் வீவக, ஒபயாஷி சிங்கப்பூர் கட்டுமான நிறுவனத்திற்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு திட்டமாகத் தொடங்கப்பட்டது.
இது, ஊழியர்களை வெகுவாகச் சார்ந்து இருப்பதைக் குறைத்து புதிய கட்டுமான முறைகளைச் சோதனை செய்ய உதவுகிறது.
முன்கூட்டியே தயாரிக்கப்படும் அதிக அளவிலானப் பாகங்களைப் பயன்படுத்தி மிகவும் திறமையான, துல்லியமான தொழில்நுட்பங்களைப் புகுத்தும் நடவடிக்கைகளால் ‘கார்டன் வாட்டர்ஃபிரண்ட்-1, 2@தெங்கா’ ஆகிய இரண்டு திட்டங்களிலும் அதிக உற்பத்தித்திறன் சாதிக்கப்பட்டதாக வீவக விளக்கியது.
“வீவக வீடுகளின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மிகவும் தரமான முன்கூட்டியே தயாரிக்கும் முறைகளால் கட்டுமானத்தை எவ்வாறு அதிக உற்பத்தித்திறன் கொண்டதாக மாற்ற முடியும் என்பது கட்டுமான மாற்றுத் திட்டத்தின் கீழ் ஆராயப்பட்ட ஒரு துறையாகும்.
“தெங்கா திட்டங்களுக்காக, கட்டுமானத்தளத்திற்கு வெளியே பாகங்கள் செய்யப்பட்டதால் கட்டுமானத் தளத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறைத்தன. இது, பளூதூக்கிகளின் பயன்பாடு, மனிதவளத் தேவைகளைக் குறைத்ததோடு ஒருங்கிணைப்பதற்கான தேவைகளையும், தளத்தில் ஏற்படும் நெரிசலையும் குறைத்தது. இதனால் கட்டுமானப் பணிகள் மிகவும் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடிந்தது,” என்று கழகம் கூறியது.
முன்வார்ப்பு முறையின் ஒரு பலனாக, உத்தரங்கள், தூண்கள் இல்லாத அறைகளைக் கொண்ட வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, குடியிருப்பாளர்களின் வசதிக்கு ஏற்ப இடத்தை வடிவமைத்துக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.
“கார்டன் வாட்டர்ஃபிரண்ட்-1, 2@ தெங்கா’ தவிர, உத்தரங்கள், தூண்கள் இல்லாத இத்தகைய புதுமை, பேஷோர், புக்கிட் மேரா, காலாங்/வாம்போ, மவுண்ட் பிளசண்ட் போன்ற பகுதிகளில் உள்ள மேலும் ஆறு பிடிஓ திட்டங்களிலும் புகுத்தப்பட்டுள்ளது.