மம்தாவுக்கு இரண்டாவது அடி; இடைத்தேர்தலில் மற்றொரு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்
கோல்கட்டா: ரெஜிநகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரபியுல் ஆலம் சவுத்ரி, தனது வேட்புமனுவைத் திரும்ப பெற்றார்.
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி , சட்டசபை தேர்தலில் நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கும், ரெஜிநகர் தொகுதிக்கும் அக்.,6 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பாஜ, காங்கிரஸ், மம்தா ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தனர்.
மம்தா தரப்பில் சஞ்சிதா தேவ் பிரதான் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசிய பிறகு தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். தற்போது ரெஜிநகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரபியுல் ஆலம் சவுத்ரியும் வேட்புமனுவை திரும்ப பெற்று தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கி உள்ளார்.
மம்தாவுடன் கலந்தாலோசித்த பின்னரே தனது வேட்புமனுவைத் திரும்பப் பெறும் முடிவை எடுத்தேன் என சவுத்ரி தெரிவித்தார். அடுத்தடுத்த நாட்களில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களும் வேட்புமனு வாபஸ் பெற்று இருப்பது மம்தாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.