பயணிகளுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சென்னை: ரயில் பயணத்தின்போது செல் போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பது, கேம் விளையாடுவது, செல் போனில் சத்தமாகப் பேசுவது, அநாகரீகமான ரிங்டோன் களை வைப்பது போன்றவற்றால் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதுகுறித்து, பயணிகள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதைக் கட்டுப்படுத்த, திருத்தப்பட்ட 2026-ம் ஆண்டின் ஜன் விஸ்வாஸ் சட்டத்தின்படி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் செல்போனில் அதிக சப்தத்துடன் ‘ஹெட்போன்’ பயன்படுத்தாமல் பாட்டு, வீடியோக்களை சத்தமாகப் போட்டு சக பயணிகளுக்குத் தொல்லை கொடுத்தால் இனி, ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்துப் பாயும் என தெற்கு ரயில்வே, அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், “இந்த அபராதத்தை டிக்கெட் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப்பிரிவு அலுவலர்கள் வசூலிக்கலாம். எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தொந்தரவு அளித்தால், ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து ரயில் நிலையங்கள், ரயில்களில், தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எச்சரிக்கை அறிவிப்புகளைப் பொது ஒலிபெருக்கிகள் வாயிலாக வெளியிடவும், ஸ்டிக்கர்கள் ஒட்டியும் பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது” என்றார்.
சக பயணிகளுக்கு தொல்லை தருபவர்களின் பயணச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் கீழே இறக்கிவிடப்படுவார்கள். ரயில்வே ஊழியர்கள் எச்சரித்த பிறகும் அத்துமீறல் தொடர்ந்தால் 6 மாதம் வரை சாதாரண சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது என தண்டனை விவரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.