புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்த் துறையில் பெண் பேராசிரியை வேலை கேட்டு போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ் துறையில் வேலை கேட்டு பெண் பேராசிரியை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் 6 வருகை தரு விருந்தினர் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்ப ஜூலை மாதம் 16ம் தேதி வெளியானது. மணி நேர விரிவுரைக்கு 1,500 ரூபாய் வீதம் மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
இதில் பலர் விண்ணப்பித்தனர். இப்பணிக்கு ஜூலை 27 ம்தேதி நேர்காணல் நடந்து, இறுதியாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணிக்கு பெரியக்காலாப்பட்டு மூகாம்பிகை நகரை சேர்ந்த பேராசிரியை பொற்கலையும் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
இதில் அதிர்ச்சியடைந்த அவர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். தான் எழுதிய நுால்களுடன் கோரிக்கை பதாகையுடன் துறையின் தரையில் பரப்பிய அவர், தனக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து துறை தலைவர் ரவிக்குமார் 6.15 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டார்.
இது குறித்து பெண் பேராசிரியை பொற்கலை கூறும்போது, மறைந்த எனது கணவர் கருணாநிதி தமிழியற்புலத்தில் டீனாக பணியாற்றி வந்தார். குழந்தையுடன் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படுகிறேன். தமிழியற்புலத்தில் வருகை தரு விருந்தினர் பேராசிரியர் பணிக்கு சேர தகுதி இருந்தும் புறக்கணிக்கின்றனர்.
தகுதியில்லாதவர்களுக்கு பேராசிரியை பணியை கொடுக்கின்றனர். இது என்ன நியாயம் என்றே தெரியவில்லை. கருணை அடிப்படையில் நிரந்தர பேராசிரியர் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.