📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 21, 2026 11:00 PM

ஆசிய அரங்கில் தமிழ்ப்பெண்ணின் சாதனை! அரசின் கவனம் எங்கே?

ஆசிய அரங்கில் தமிழ்ப்பெண்ணின் சாதனை! அரசின் கவனம் எங்கே?

ஜகதீஸ்ரீ குமரேசன் போன்ற திறமையான இளம் வீராங்கனைகளின் சாதனையைத் தமிழ்நாடு அரசு உரிய முறையில் அங்கீகரித்து, அவர்களின் எதிர்கால சர்வதேசப் பயணத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பெருமை

இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையைச் சேர்ந்த இளம் மோட்டார் பந்தய வீராங்கனை ஜகதீஸ்ரீ குமரேசன், தாய்லாந்தில் நடைபெற்ற FIM Asia Women’s Cup of Circuit Racing போட்டியின் 4 ஆவது சுற்றில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒட்டுமொத்தமாக 3 ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் பந்தயத்தில் 3 ஆவது இடத்தையும், இரண்டாவது பந்தயத்தில் 4 ஆவது இடத்தையும் பெற்ற அவர், ஆசிய அளவிலான இப்போட்டியில் வெற்றி மேடையேறி, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இத்தகைய சர்வதேச சாதனைகளைப் படைக்கும் நமது இளம் வீராங்கனைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய பாராட்டு, ஊக்கம் மற்றும் அரசு ஆதரவை வழங்குவதுதான் விளையாட்டுத் துறையை வளர்ப்பதற்கான உண்மையான வழியாகும்.

அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளதா?

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஒவ்வொரு தமிழக வீரர், வீராங்கனையையும் அவர்களின் திறமை மற்றும் சாதனையின் அடிப்படையில் சமமாகக் கவுரவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அரசு ஆதரவு வழங்க வேண்டும்

குறிப்பாக, மோட்டார் பந்தயம் போன்ற சவாலான சர்வதேசக் களங்களில் சாதித்து வரும் இளம் பெண் வீராங்கனைகளுக்குத் தேவையான தீவிரப் பயிற்சி, நிதியுதவி, கட்டமைப்பு வசதிகள், அரசு அங்கீகாரம் மற்றும் தொடர் ஆதரவை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

எனவே, ஜகதீஸ்ரீ குமரேசன் போன்ற திறமையான இளம் வீராங்கனைகளின் சாதனையைத் தமிழ்நாடு அரசு உரிய முறையில் அங்கீகரித்து, அவர்களின் எதிர்கால சர்வதேசப் பயணத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.