புகைமூட்டம்: என்95 முகக்கவசங்கள் விநியோகம்
காற்றுத் தரக் குறியீடு 200ஐ தாண்டி மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டினால், தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு என்95 முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்று சிங்கப்பூர் புகைமூட்டப் பணிக்குழு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அறிவித்தது.
மத்திய வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) இரவு 8 மணி நிலவரப்படி, 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) 192ஆகப் பதிவானது. இதுவே 2026ஆம் ஆண்டில் பதிவான ஆக அதிக அளவாகும். இதற்குமுன் செப்டம்பர் 29ஆம் தேதி, மத்திய வட்டாரத்தில் அக்குறியீடு 167ஆகப் பதிவானதே அதிகபட்ச அளவாக இருந்தது.
24 மணி நேரப் புகைக் குறியீடு 200ஐத் தாண்டும் சாத்தியம் உள்ளதாக தேசியப் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்தது.
முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறையினர், ‘சாஸ்’ ஆரஞ்சு, நீல அட்டை வைத்திருப்போர், மருத்துவக் கட்டண விலக்கு அட்டை பெற்றிருப்போர், கம்கேர் உதவி பெறுவோர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கழக மையங்கள், சமூக சேவை அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து முனையங்களில் வைக்கப்படும் தானியங்கி எந்திரங்கள் மூலம் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இலவசமாக முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்கள், 7 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், ஆஸ்துமா போன்ற உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களும் மக்கள் கழக மையங்களில் முகக்கவசங்களைப் பெறலாம்.
புகைமூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், பொதுமக்களுக்கு சமூக மன்றங்களில் குளிரூட்டப்பட்ட அறைகள் தயார்படுத்தப்படும். பாலர் பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகள், தீவிரமான உடற்பயிற்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு குழந்தைப்பருவ மேம்பாட்டு முகவை உத்தரவிட்டுள்ளது.
சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க காற்றைச் சுத்தப்படுத்தும் வசதியுடன் கூடிய தனி அறைகளைத் தயார் நிலையில் வைக்குமாறும் பாலர் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவின் சுமத்ரா, மேற்குக் கலிமந்தான் பகுதிகளிலிருந்து அடர்ந்த புகைமூட்டம் சிங்கப்பூரை நோக்கி நகர்வதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பிஎஸ்ஐ ஆரோக்கியமற்ற வரம்பில் இருக்கும்போது பொதுமக்கள் நீடித்த அல்லது கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், நாட்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.