போலி சுற்றுலாத் தள மோசடி; $185,000 இழப்பு எனக் காவல்துறை தகவல்
பயணிகள், தங்களின் பயணங்களுக்காகப் பதிவுசெய்த தங்குமிடங்களின் தகவல்களைக் கொண்டு ‘ஃபிஷிங் மெசேஜஸ்’ எனப்படும் தூண்டு களவுக் குறுந்தகவல்கள் வாயிலாக ஏமாற்றப்படுகின்றனர்.
பயணம் மேற்கொள்ளப்படும் தேதி, இடங்கள் உள்ளிட்ட தகவல்களும் இத்தகைய மோசடிச் செயல்களில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் குறைந்தது 148 புகார்கள் வந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக அந்த மோசடிக் குறுந்தகவல்களை வாட்ஸ்அப், மின்னஞ்சல்வழியாகப் பெறுவர். மோசடிக்காரர்கள் ஹோட்டல்கள், ஹோட்டல் பதிவுத் தளங்கள் என ஏமாற்றி அந்தக் குறுந்தகவல்களை அனுப்புவர்.
அதைத் தொடர்ந்து குறுந்தகவல்களைப் பெறுவோர் தங்களின் வங்கி அட்டை விவரங்களைச் சரிபார்க்குமாறோ அவர்களின் பயணப் பதிவு விவரங்களை உறுதிப்படுத்துமாறோ கேட்டுக்கொள்ளப்படுவர்.
சில வேளைகளில் பயணிகள் உண்மையாகவே செய்த பதிவுகளின் விவரங்கள் குறுந்தகவல்களில் இருக்கும். அதனால் அக்குறுந்தகவல்கள் நம்பகத்தன்மையைப் பெறுவதுண்டு எனக் காவல்துறை குறிப்பிட்டது.
பிறகு தங்களின் பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃபிஷிங் இணைப்பு அனுப்பப்படும். தங்களின் வங்கி அட்டை விவரங்களை அளித்து அவ்வாறு செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர்.
இவ்வாறே இதுபோன்ற மோசடி மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை குறைந்தது 185,000 வெள்ளி பறிபோனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிகள் குறித்து கூடுதல் தகவல்களைப் பெற பொதுமக்கள் 1799 எனும் ஸ்கேம்ஷீல்ட் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.scamshield.gov.sg இணையத்தளத்தை நாடலாம்.