'பத்தா' அல்லது 'ராக்கா' படம் ஆஸ்கருக்கு செல்லும்
'பத்தா' அல்லது 'ராக்கா' படம் ஆஸ்கருக்கு செல்லும்- இயக்குநர் அட்லி நம்பிக்கை
"மருதநாயகம் திரைப்படத்தில் கமல் சாரும், விஜய் சேதுபதி சாரும் நடிக்க வேண்டும். அதற்கான சூழலும் அமையும்" என இயக்குநர் அட்லி தெரிவித்தார்.
Published : October 5, 2026 at 8:36 PM IST
சென்னை: பத்தா திரைப்படம் அல்லது ராக்கா படம் ஆஸ்கருக்கு செல்லும் என்று திரைப்பட இயக்குநர் அட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதக்காதி போன்ற படங்களுக்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான 'பத்தா' படத்தை இயக்குநர் அட்லி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்ததின் சக்சஸ் மீட், சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணீதரன், நடிகை லிஜோ மோல், இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தயாரிப்பாளர்கள் அட்லி மற்றும் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகை லிஜோ மோல் பேசுகையில், "படப்பிடிப்பிலும் டப்பிங் பேசும் போதும் இயக்குநர் பாலாஜி தரணீதரன் எனக்கு பொறுமையாக அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். விஜய் சேதுபதி மீது எனக்கு பயம் கலந்த மரியாதை. உடன் நடிப்பவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு அவகாசம் அளிப்பதை பார்த்து வியப்படைந்தேன்" என்றார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், "இந்த படத்தில் அனைவரும் தேசிய விருது வாங்கும் அளவுக்கு நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வேறு ஒருவர் இசை அமைப்பதாக இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை அட்லி எனக்கு கொடுத்து விட்டார். பத்தா படத்தை தொடர்ந்து அடுத்த படமும் அட்லியுடன் பணியாற்ற உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், "முதலில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் நண்பர் என்பதால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. படத்தின் கதையை நன்றாக புரிந்து கொண்டார். நடிகை லிஜோ, குழந்தை நட்சத்திரம் சாய் ஆகிய இருவரும் மிக அற்புதமாக நடித்துள்ளனர்.
படம் 1980-களில் நடக்கும் என்பதால் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாரா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால், அதை மாற்றி எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தார்" என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், "ஒரு படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கும்போது, பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருப்பதுபோல் நாங்கள் காத்திருப்போம். பத்திரிகையாளர்கள் சிரித்தபடியே வெளியே வந்து எங்களை பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த படத்தை இரண்டு தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்றோம். ஆனால் வணிக நோக்கத்துடன் பார்த்தார்கள். சீதக்காதி படத்தை கமல்ஹாசன் அல்லது அமிதாப் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் பாலாஜி கூறினார். நம் தெருவில் அத்தனை நாய் இருந்தாலும் நமக்கு வெளிநாட்டு நாய் தான் பிடிக்கும். நான் விளையாட்டாக சொன்னேன். நீங்கள் எதுவும் நினைத்துக் கொள்ள வேண்டாம்" என்று சிரித்தபடி கூறினார்.
"என் 25-வது படமாக சீதக்காதி அமைந்தது. இந்த படத்தை அட்லியிடம் கொண்டு சென்றேன். ஒப்புக் கொண்டார். இந்த படத்தில் நான்தான் ஹீரோ என அழைத்துச் சென்று வில்லனாக காட்டியுள்ளனர். அந்த குழந்தை நட்சத்திரம் சாய்தான் படத்தின் ஹீரோ. அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
நடிகை லிஜோ மோலை பார்க்கும்போது என் தாய்தான் என் நினைவுக்கு வந்தார். அவர் மலையாளி நடிகையாக இருந்தாலும் 1980-களின் வசனங்களை நன்றாக பேசி நடித்தார்" என்றார்.
இறுதியாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் அட்லி பேசுகையில், "நான் நடந்து கொண்டே வந்து பேசினால் திமிரு என்கிறார்க்ள. எனக்கு திமிரு அதிகம். நான் கான்ஃபிடன்டாக இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அது எனக்கு பிரச்சனை இல்லை.
படத்தின் கதையை கேட்கும் போது நான் கண் கலங்கினேன். இந்த படத்தை என்னால் தனியாக எடுக்க முடியவில்லை. மற்ற தயாரிப்பாளர் உடன் இணைந்து பணியாற்றினோம்.
தொடக்கத்தில் என் மீது விஜய் சேதுபதிக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அவரது பேச்சில் நேர்மை இருக்கும். ஒரு கலைஞனாக, ஒரு சகோதரராக எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்.
விஜய் சேதுபதியை ஒரு மனிதனாக முதலில் பிடிக்கும்; அதன் பிறகு நடிகராக பார்க்கிறேன். அவருடைய நடிப்பை பார்த்து ரஜினிகாந்த், ஷாருக்கான் ஆகியோர் பாராட்டி இருக்கிறார்கள். கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என என்பது என் நீண்ட நாள் ஆசை. அது நடந்தால் தெறிக்க விடுவேன்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒரு கடவுளின் குழந்தை. நான் என் அடுத்த படத்தின் வேலைக்காக லண்டன் சென்ற போது அங்குள்ள இசைக்கலைஞர்களுக்கு எங்களை தெரியவில்லை. இசையமைப்பாளர் சாய் கொடுத்த நோட்ஸை எடுத்து வாசித்து விட்டு அவரை பாராட்டினார்கள். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் ஒரு செல்லப்பிள்ளையாக சாய் உள்ளார். என் வாழ்வில் அரசியல் கிடையாது. விஜய் எனக்கு அண்ணன்; நான் அவருக்கு தம்பி" என்றார்.
"ராக்கா படம் கின்னஸில் இடம்பெற்றுள்ளார். அந்த படம் ஆஸ்கர் வென்று விட்டால், மேடையில் தமிழிலில் தான் பேசுவேன். மும்பை சென்று படம் இயக்கும் போது என்னை யாருக்கும் தெரியாது. ஆனால் ஹாலிவுட்டில் நம்மை திரும்பி பார்க்க வேண்டும்.
ராக்கா படத்தில் தமிழ் மக்களுக்கு பெரிய பெருமை இருக்கும். நான் கருப்பு நிறம் தான். ஆனால், நான்கு படங்களில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்க முன்வந்தார்கள். எனக்கு மருதநாயகம் படத்தை இயக்க வேண்டும் என்று ஆசை. அதில் கமல் சாருடன் விஜய் சேதுபதி சாரும் நடிக்க வேண்டும் என திட்டம் உள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதை தான் ஹீரோவாக இருக்கும். இயக்குநர் ஷங்கர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் உள்ளார். அவரை வில்லனாக நடிக்க வைக்க முடியாது.
விஜய் சேதுபதி எங்கு சென்றாலும் அனைவருக்கும் அவரை தெரியும். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் பற்றி நிறைய பேசுகிறார்கள். தமிழில், தாய்க்கிழவி, மொதராத்திரி, மண்டாடி, DC உள்ளிட்ட படங்கள் நன்றாக உள்ளன. பத்தா படத்திற்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும்" என்றார்.
தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி, உங்கள் நெருங்கிய நண்பரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஆமாம். ஆனந்த் அம்பானி, எனது நண்பர்தான்" என்று அட்லி பதில் அளித்தார்.