📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 05, 2026 07:01 PM

ஆம்பள திமிரை சுக்குநூறாக உடைத்து வரும் தமிழ் சினிமா.. மொத ராத்திரி, டோரத்தி, பத்தா நடத்திய பாடம்!

ஆம்பள திமிரை சுக்குநூறாக உடைத்து வரும் தமிழ் சினிமா.. மொத ராத்திரி, டோரத்தி, பத்தா நடத்திய பாடம்!

சென்னை: அனிமல் படத்தில் ஆல்ஃபா மேல் என்றும் டாக்ஸிக் படத்தில் பெண்களை ஆபாச பொருளாகவும் சித்தரித்து மற்ற மொழிகளில் படங்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து முற்போக்கு சிந்தனைகளை கொண்ட படங்களை இங்குள்ள இயக்குநர்கள் இயக்கி வருவது பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

ஆம்பள திமிர் என்கிற ஒரு ஆணாதிக்க விஷயத்தை சுக்கு நூறாக உடைக்க பல ஆண் இயக்குநர்களே தமிழ் சினிமாவில் போட்டிப் போட்டு கடந்த சில வாரங்களாக படங்களை எடுத்து வெற்றியும் கண்டு வருவது ஒட்டுமொத்த திரைத்துறையையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கமர்ஷியலை தாண்டி கருத்து சொல்கிறேன் என படம் எடுத்தாலே விருது படம் என ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்கிற புரிதலுடன் கமர்ஷியலையும் கலந்து நல்ல கருத்துக்களையும் கலந்து அட்டகாசமான படங்களாக தமிழ் சினிமா இயக்குநர்கள் கொடுத்து வருவது பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

மொத ராத்திரி: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் - அனிஷ்மா அனில்குமார் நடித்து வெளியான மொத ராத்திரி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. ஆம்பள திமிர், ஊர் கெளரவம், பெண்களுக்கு எதிரியாக பெண்களே இருப்பது, வாழ்க்கைப் பற்றிய புரிதல் இல்லாமல் இளம் வயதில் வரும் காதல், வரட்டு கெளரவம் என ஏகப்பட்ட விஷயங்களை தூக்கிப் போட்டு மிதித்தது போல ஒரு படத்தை கொடுத்து அசத்தியுள்ளார் ராஜா கருப்பசாமி என பலரும் அவரை கொண்டாடி வருகின்றனர்.

டோரத்தி: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான டோரத்தி படத்தையும் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். விசில் அடித்துக் கொண்டே வில்லத்தனம் செய்து பொட்டச்சிகளை போட்டுத் தள்ளும் கதாபாத்திரத்தில் முத்துகுமாரை நடிக்க வைத்த விதமும் கீர்த்தி சுரேஷ் மரணத்துக்குப் பிறகு சனந்த் பெண்ணாக மாறியதை அம்பலப்படுத்தும் காட்சிகளும் ஆம்பளத் திமிரை சுக்குநூறாக உடைத்து எறிந்துள்ளது என்கின்றனர்.

பத்தா: மொத ராத்திரி, டோரதி வரிசையில் கடந்த வாரம் வெளியான விஜய் சேதுபதியின் பத்தா படமும் ரவுடியாக இருந்தாலும் ஒரு பாத்ரூமில் 8 நாட்கள் அடக்கி வைத்தால் ஆட்டம் கண்டு விடும் என்பதை ஒரு சிறுவனை வைத்து பாடம் எடுத்தது போல பாலாஜி தரணிதரன் இயக்கி ஆணாதிக்க செருக்கை உடைத்தெறிந்துள்ளார். குடும்பம் தான் முக்கியம், அன்பு, பாசம் தான் இந்த உலகில் பெரியது. ஆணவம், அகந்தை, கொலை வெறி, கெளரவக் கொலை எல்லாம் பார்க்காதீங்கடா, ஒருமுறை கிடைத்துள்ள அழகான வாழ்க்கையை அன்பாக வாழ்ந்து பாருங்கடா என தமிழ் சினிமா தொடர்ந்து ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லி வருவதை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும். பாக்ஸ் ஆபீஸ் வசூலை கடந்து நல்ல படங்கள் தொடர்ந்து பெருகி வந்தால் நிச்சயம் மக்கள் அதனை கொண்டாடத்தான் செய்வார்கள். வசூலை விட மனமாற்றம் செய்யும் நல்ல முயற்சிகளும், படங்களும் நல்ல சமுதாயத்தை உண்டாக்கும் என்கின்றனர்.