📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 05, 2026 07:04 PM

பணியிடப் பாதுகாப்பு: மனிதவள அமைச்சு வலியுறுத்தல்

பணியிடப் பாதுகாப்பு: மனிதவள அமைச்சு வலியுறுத்தல்

கட்டுமான, போக்குவரத்து, பொருள்கள் வைக்கப்படும் கிடங்குகள் உள்ள நிறுவனங்கள், பணியிடப் பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய அக்டோபர் 5 முதல் 18ஆம் தேதி வரை நேரம் ஒதுக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த இரண்டு துறைகளிலும் வேலையிடங்களில் ஏழு மரணங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் திங்கட்கிழமை (அக்டோபர் 5) தெரிவித்தார்.

மனிதவள அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. இவ்விரு துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் பணியிடப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவும் ஆபத்துகள் ஏற்படுவதைக் தடுப்பதற்குரிய கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும் ஊக்குவிக்கப்படுவதாக அது கூறியது.

குறிப்பாக, திரவ கான்கிரீட்டை உரிய கட்டுமானப் பகுதியில் கொட்டுவதற்கான இயந்திரங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதிலும் வாகனங்கள் தானாக நகர்ந்துசெல்வதைத் தடுப்பதிலும் அவை கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.

ஓட்டுநர்கள் வாகனத்தை விட்டு இறங்குவதற்கு முன்னர் அதனை நிறுத்துவதற்குரிய கட்டுப்பாட்டு விசை இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தேவைப்படும்போது சக்கரத்தின் கீழ்ப்பகுதியில் முட்டுக்கட்டைகளை வைப்பதும் இவற்றில் அடங்கும்.

செப்டம்பர் 28ஆம் தேதி, காலாங்கில் உள்ள கட்டுமானத் தளமொன்றில் 22 வயது ஊழியர் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். சம்பவம் நேர்ந்தபோது அவர் 12வது தளத்தில் திரவ கான்கிரீட்டைக் கொட்டுகின்ற நடமாடும் இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 4 வரை இரு துறைகளிலும் தீவிர அமலாக்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சு தனது பதிவில் குறிப்பிட்டது. தடுப்பு நடவடிக்கைகளையும் பொறுப்பேற்றுக்கொள்ளும் விதிமுறைகளையும் வலுப்படுத்துவது அவற்றின் நோக்கம்.

முதன்முறை செய்யும் குற்றங்களுக்கான அபராதம் $2,000லிருந்து $3,000ஆக உயர்த்தப்படும்; மீண்டும் செய்யப்படும் குற்றங்களுக்கு அல்லது கடுமையான குற்றங்களுக்குக் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மேலும், வேலை நிறுத்த உத்தரவுகளின் குறைந்தபட்சக் காலம் ஐந்து வாரங்களில் இருந்து எட்டு வாரங்களாக அதிகரிக்கப்படும்; மேலும் கடுமையான சம்பவங்களில் நிறுவனங்கள் புதிதாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கு மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.