‘கேபாட்’ கடத்தல் தொடர்பில் சிங்கப்பூரில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் ஆடவர்
சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டான ‘கேபாட்’ கருவிகளைக் கடத்தி வந்த ஆடவருக்கு மூவாண்டுச் சிறையும் ஐந்து பிரம்படிகளும் தண்டனையாக அக்டோபர் 2ஆம் தேதி விதிக்கப்பட்டது.
‘கேபாட்’ கடத்தலுக்காகச் சிங்கப்பூரில் தண்டனை வழங்கப்படும் முதல் ஆடவரான 39 வயது பிங் சுவீ செங், எட்டோமிடேட் எனும் போதைப் பொருளைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததையும் அதனை உட்கொண்டதையும் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்பட்டபோது இரண்டு மின்சிகரெட்டுகளைக் கடத்தி வந்ததற்காக அவர்மீது சுமத்தப்பட்ட மூன்றாவது குற்றச்சாட்டு கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டது.
ஜனவரி 5ஆம் தேதி, ‘பாட்’ என அறியப்படும் நபரிடமிருந்து பிங்கிற்குச் சிங்கப்பூருக்குள் ‘கேபாட்’ கருவிகளைக் கடத்தி வந்தால் $500 முதல் $800 வரை ரொக்கம் வழங்கப்படும் எனத் தகவல் வந்தது.
அது சட்டவிரோதமானச் செயல் என்று தெரிந்தும், பணத் தேவை இருந்ததால் பிங் அதற்கு ஒப்புக்கொண்டார்.
பிப்ரவரி 6ஆம் தேதி, அவர் வாடகைக்கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு ஜோகூர் பாருவில் உள்ள வர்த்தக வளாகத்திற்குச் சென்று ‘கேபாட்’ கருவிகளைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், மலேசியாவிலிருந்து மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய அவர் முயன்றபோது, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது அவரது காரின் பின்புறப் பெட்டியில், சலவை சோப்புத் தூள் எனப் பெயரிடப்பட்ட இரண்டு பொட்டலங்கள் இருந்தன. அவற்றில் இரு மின்சிகரெட்டுகளும் 200க்கும் மேற்பட்ட ‘கேபாட்’ கருவிகளும் இருந்தது கண்டறியப்பட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கைது செய்யப்பட்ட பிங்கைப் பரிசோதித்தபோது, அவர் எட்டோமிடேட் உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டது.