📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 09, 2026 04:02 PM

பிஸ்எஸ்ஜி தளம்: சிங்கப்பூர் வணிகங்களுக்கான AI உதவி

பிஸ்எஸ்ஜி தளம்: சிங்கப்பூர் வணிகங்களுக்கான AI உதவி

சிங்கப்பூர் வணிகங்கள் அரசாங்க உதவிகளையும் சேவைகளையும் எளிதாகவும் விரைவாகவும் அணுகும் வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘பிஸ்எஸ்ஜி’ (BizSG) என்னும் புதிய இணையவாசல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற்ற சிறிய, நடுத்தர நிறுவனங்களின் மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார் வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்.

அரசாங்க மானியங்களுக்கும் உரிமங்களுக்கும் விண்ணப்பிக்க தற்போது வணிகங்கள் பல்வேறு இணையத்தளங்களை ஆராய வேண்டியுள்ளது.

இதை எளிதாக்கும் வகையில், செப்டம்பர் 30ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த இணையவாசல், நிறுவனங்களின் தேவைக்கேற்ப அரசாங்க உதவிகளைப் பரிந்துரைக்கும் ஒரு மின்னிலக்க வழிகாட்டியாகச் செயல்படும்.

மாநாட்டில் பங்கேற்ற கலாசார, சமூக இளையர்துறை மூத்த துணை அமைச்சருமான திருவாட்டி லோ, “வேகமாக மாறிவரும் வணிக உலகில் நிறுவனங்கள் விரைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

‘‘அவ்வகையில் ‘பிஸ்எஸ்ஜி’ தளம் செயற்கை நுண்ணறிவின் மூலம் வணிகங்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்குப் பொருத்தமான சேவைகளை விரைவாக பரிந்துரைக்கும்,” என்று குறிப்பிட்டார்.

மூன்று மானியங்கள் ஒருங்கிணைப்பு: எளிதாகும் நிதியுதவி

சிறிய, நடுத்தர நிறுவனங்களில் 77 விழுக்காடு ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்ன திருவாட்டி லோ, “தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை அதிகரிப்பது, அவற்றுக்குத் தேவையான உதவிகளைக் கண்டறிவதை எளிதாக்குவது, அவற்றின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் அவற்றின் ஆற்றலை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் இலக்கை இம்முயற்சிகள் வெளிப்படுத்துகின்றன,’’ என்றார்.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின்போது வணிகங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் இலக்குடன் அறிவிக்கப்பட்ட ‘எட்ஜ்’ (EDGE) எனும் ஒருங்கிணைக்கப்பட்ட மானியத் திட்டம் பற்றியும் தம் உரையில் குறிப்பிட்டார் திருவாட்டி லோ.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மூன்று முக்கிய அரசு மானியங்களான வணிக மேம்பாட்டு மானியம், சந்தை ஆயத்தநிலை உதவி மானியம், உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியம் ஆகியவற்றை ஒருசேர கொண்டுவந்து நிறுவனங்கள் எளிதாகப் நிதியுதவி பெற இத்திட்டம் வழிவகுக்கிறது.

‘பிஸ்எஸ்ஜி’ இணையவாசலில் இந்த ஒருங்கிணைந்த மானியங்கள் குறித்த விவரங்களையும் தொழிலுக்குக் கைகொடுக்கும் இதர மானியங்கள், நிதியுதவி பற்றிய விவரங்களையும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எளிதாகப் பெற இயலும்.

அரசாங்க ஆதரவு மட்டுமன்றி, எஸ்எம்இ நிலையங்கள், வர்த்தகச் சங்கங்கள் தொடர்ந்து வணிகங்களின் உருமாற்றத்திற்குத் உறுதுணையாக இருக்கும் என்று சொன்ன திருவாட்டி லோ, புதிய தொழில்நுட்பங்களை ஏற்று சிங்கப்பூர் வணிகங்கள் உலக அளவில் சிறந்து விளங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.