இம்ரான் கானின் உடல்நலத்தில் சமரசம் செய்ய முடியாது.. அவருடன் பேசி 3 ஆண்டுகள் ஆகிறது
இம்ரான் கானின் உடல்நலத்தில் சமரசம் செய்ய முடியாது.. அவருடன் பேசி 3 ஆண்டுகள் ஆகிறது- வசீம் அக்ரம்
லண்டன்: இம்ரான் கானின் உடல்நலத்தில் சமரசம் செய்ய முடியாது என்று தனது நெருங்கிய நண்பரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் குறித்தும் பேசிய அக்ரம், அவரது உடல்நிலை குறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார். இம்ரானுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் பேசவில்லை என்றும், அவருக்கு என்ன நடக்கிறது என்பது கவலையளிப்பதாகவும் அக்ரம் கூறினார்.
இது குறித்து நேர்காணலில் பேசிய வசீம் அக்ரம், "நான் அவருடன் பேசி மூன்று ஆண்டுகள் ஆகிறது. அரசியல் ரீதியாக அவருக்கு இப்போது நடப்பவை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நீதிமன்ற நடைமுறைகள் ஒருபுறம் இருந்தாலும், அவரது உடல்நலனைப் பொறுத்தவரை எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளக் கூடாது" என்று அக்ரம் கூறினார்.
"இங்கிலாந்திலும் மற்ற இடங்களிலும் இம்ரான் கானின் நிலைமையை மேம்படுத்த சில இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பாகிஸ்தானில் அது போன்ற முயற்சிகள் நடக்கிறதா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
"ஒரு தனிமனிதனாக அவர் மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாகவே எனது மனதின் ஆழத்திலிருந்து நான் பேசுகிறேன். அவர் தண்டனை பெற்றவரா இல்லையா, சிறையில் இருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல. நாம் அவரது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். அங்கே என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் நான் கவலைப்படுகிறேன். அவரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று அக்ரம் கூறினார்.
சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பவ்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்களும் தற்போது அரசுக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளனர். வசீம் அக்ரமின் கிரிக்கெட் மெண்டராக இம்ரான் கான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.