பிரபல இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்
சென்னை: பிரபல இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ், வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் இன்று(அக்., 3) இரவு காலமானார். அவருக்கு வயது 95. உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி பிரிந்தது.
ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள உதயகிரியில் 1931ம் ஆண்டு செப்., 21ம் தேதி பிறந்தவர் சிங்கீதம் சீனிவாச ராவ். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர். சினிமா மீது தீராத காதல் கொண்டிருந்த இவர் புகழ்பெற்ற இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் இணை இயக்குநராக தன் பணியை தொடங்கினார். தெலுங்கில் 1972ல் வெளியான ‛நீதி நிஜாயிதி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தமிழில் இவர் இயக்கிய முதல்படம் 1974ல் 'திக்கற்ற பார்வதி'. முதல் தமிழ் படத்திற்கே இவருக்கு தேசிய விருது கிடைத்தது. ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், மகளிர் மட்டும், லிட்டில் ஜான் உள்ளிட்ட பல தமிழ் படங்களை இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர்களது கூட்டணியில் வெளியான ராஜபார்வை, புஷ்பக விமானம், தமிழில் பேசும்படம், மைக்கேல் மதனகாமராஜன், அபூர்வ சகோதரர்கள், மகளிர் மட்டும், காதலா, காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வெளிவந்துள்ளன.
கடைசிகாலகட்டம் வரை சினிமாவை நேசித்தவர் சிங்கீதம் சீனிவாச ராவ். 95 வயதிலும் சிங்கீதம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். சில மாதங்களுக்கு முன் இந்த படம் வெளியானது. இத்திரைப்படம் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மனிதர்களின் பேராசையையும் ஒரு மாயாஜால இசையுடன் இணைத்து நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமாக சொன்னது.
இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கலைஞர். சோதனைக் கலைஞர் என்று அழைக்கப்படும் இவர் இயக்குனர் என்பதை தாண்டி சிறந்த திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். தென்னிந்திய சினிமாவின் எல்லைகளைத் தனது அசாத்தியப் படைப்பாற்றலால் விரிவுபடுத்தியவர். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் படத்தை எடுக்காமல், பேண்டஸி, புனைவுக்கதைகள், மவுனப்படம் என பல்வேறு கோணங்களில் படம் எடுத்து சாதனை படைத்தவர்.
திக்கற்ற பார்வதி, புஷ்பக விமானா ஆகிய படங்களுக்காக இரண்டு முறை தேசிய விருதும், 6முறை ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றுள்ளார். தவிர பிலிம்பேர் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு விருதுகைளுயும் வென்றுள்ளார்.
இவருக்கு 1960ம் ஆண்டு லட்சுமி கல்யாணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்த இவரது இறுதிச்சடங்கு நாளை, அக்., 4ல் ஞாயிறு அன்று நடக்க உள்ளது.
சிங்கீதம் சீனிவாச ராவ்-ன் மறைவு தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே பேரிழப்பு தான். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.