📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News October 04, 2026 01:03 PM

'பாகிஸ்தான் இனி நமக்கு ஒரு போட்டியே கிடையாது'.. தங்கம் வென்ற உற்சாகத்தில் பிசிசிஐ தலைவர் பேச்சு

'பாகிஸ்தான் இனி நமக்கு ஒரு போட்டியே கிடையாது'.. தங்கம் வென்ற உற்சாகத்தில் பிசிசிஐ தலைவர் பேச்சு

'பாகிஸ்தான் இனி நமக்கு ஒரு போட்டியே கிடையாது'.. தங்கம் வென்ற உற்சாகத்தில் பிசிசிஐ தலைவர் பேச்சு

மும்பை: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், "இந்திய அணிக்கு பாகிஸ்தான் இனி ஒரு பெரிய போட்டியே கிடையாது" என்று பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் உள்ள நிஷின் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். இறுதி கட்டத்தில் திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் குவிக்க, அவருடன் ஜோடி சேர்ந்த சிவம் துபே அதிரடி காட்டி 6-வது விக்கெட்டுக்கு 30 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் கடின இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஹசன் நவாஸ் 51 பந்துகளில் 96 ரன்கள் விளாசி அச்சுறுத்தினார். எனினும் இந்திய பந்துவீச்சாளர்கள் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டு வெற்றிக்கு வழிவகுத்தனர். அக்‌சர் படேல், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த முக்கிய வெற்றி குறித்து பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் கூறியதாவது, "பாகிஸ்தான் அணி இப்போது நமக்கு சவாலான போட்டியாகவே இல்லை. இருப்பினும் இதுபோன்ற இறுதிப் போட்டி அழுத்தத்தை இந்திய அணி கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. உலகில் வேறு எந்த அணியாலும் இப்படிப்பட்ட நெருக்கடியை இவ்வளவு நேர்த்தியாகக் கையாள முடியாது. இந்த தொடரின் மிகச் சிறந்த அணியாகச் செயல்பட்டு இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துத்துள்ளது.

அபிஷேக் சர்மா தொடக்கத்திலேயே ரன் வேகத்தை உயர்த்தினார். திலக் வர்மா நடுவரிசையில் அபாரமாக பேட்டிங் செய்தார். பேட்டர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான இலக்கை பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தற்காத்து வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர்" என்று பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் இந்திய அணியை பாராட்டினார்.