ஒரே ஒரு அப்டேட்டால் 18% வரை உயர்ந்த சன் டிவி பங்கு விலை, காரணம் என்ன?
சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தனது கிரிக்கெட் அணி சார்ந்த சொத்துக்களைப் பிரித்து, ஐபிஎல் வணிகத்தைத் தனி நிறுவனமாக மாற்றத் திட்டமிட்டு வருகிறது. இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பங்கு விலை 18% வரை உயர்ந்தது.சன் டிவி மூன்று கிரிக்கெட் அணிகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் லிமிடெட் ஆகியவை இதில் அடங்கும்.இந்த நிறுவனப் பிரிப்பு நடைமுறைக்கு வந்தால், அது பங்குதாரர்களுக்குக் கணிசமான மதிப்பை உருவாக்கக்கூடும் என்று தரகு நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.சன் டிவியின் சந்தை மூலதனம் தற்போது சுமார் ரூ. 24,000 கோடியாக உள்ளது. அதேவேளையில், அதன் கையிருப்பில் உள்ள பணத்தின் அளவு சுமார் ரூ. 8,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.அந்தத் தரகு நிறுவன அறிக்கையின்படி, ஐபிஎல் அணியின் மதிப்பு ரூ.13,000 கோடி முதல் ரூ. 14,000 கோடி வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் சன் டிவியின் மொத்த வருவாயில் 33% பங்கு ஐபிஎல் சார்ந்த வருவாயாக இருந்தது.இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, ஐபிஎல் அணிகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் மதிப்பு சுமார் ரூ.16,660 கோடி என்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் மதிப்பு சுமார் ரூ.15,286 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.புதன்கிழமையன்று சன் டிவி பங்குகள் 14% உயர்ந்து ரூ. 626.2 என்ற விலையில் வர்த்தகமாகி வருகின்றன. கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் பங்கு விலையில் ஏற்பட்ட ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கு விலை பாசிட்டிவாக உள்ளது. கடந்த பத்து வர்த்தக அமர்வுகளில் ஒன்பது அமர்வுகளில் இப்பங்கு விலை உயர்வைக் கண்டுள்ளது.