மதுராந்தகத்தில் அனைத்து கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு: வேட்பாளர்களின் பிரசார உத்திகள் என்ன?
மதுராந்தகத்தில் அனைத்து கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு: வேட்பாளர்களின் பிரசார உத்திகள் என்ன?
மதுராந்தகம், செப்.21: மதுராந்தகம் தனித்தொகுதி இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து திமுக, தவெக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தற்போது வீடுவீடாகச் சென்று மதுராந்தகம் தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்ளின் பிரசார உத்திகள் என்ன என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது.
பரந்தாமன் (திமுக)
திமுக வேட்பாளர் பரந்தாமன் பிரசாரத்திற்கு அவரது கட்சியினர் பெரும் பலமாக உள்ளனர். வட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து திமுக நிர்வாகிகளும் தங்களின் தொண்டர்களோடு மதுராந்தகம் தொகுதியில் குவிந்துள்ளனர். வார்டு வாரியாக பூத் வாரியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு வாக்காளராக அவர்கள் நேரில் சந்தித்து திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை பற்றி எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கின்றனர். அதேபோன்று சிறந்த பேச்சாளராக உள்ள பரந்தாமன், ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவும், எளிய மக்களுக்கு புரியும்படியும் பேசுவது மக்களை கவர்ந்துள்ளது.
மரகதம் குமரவேல் (தவெக)
மரகதம் குமரவேலுக்கு முக்கிய பிரச்சினையே அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போதைய ஆளும் கட்சியில் சேர்ந்து மீண்டும் தேர்தலை சந்திப்பதுதான். மக்களின் கேள்விகளை எதிர் கொள்ள முடியாத சூழலை சந்தித்தாலும், அதை ஒரு வகையாக சமாளித்து முன்னேறி வருகிறார். முதல்வர் விஜய் தனக்காக வந்து மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் செய்வார் என்ற நம்பிக்கையில் அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது, தான் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி தனது பிரசாரத்தை மேற்கொண்டு வரும் மரகதம் குமரவேல், அதிமுகவினரின் எதிர்ப்பையும் ஆங்காங்கே எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
கணிதா சம்பத் (அதிமுக)
கணித சம்பத் ஏற்கனவே இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இருப்பினும் அவருக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையே உள்ளது. பெரும்பாலான அதிமுகவினர் தவெக பக்கம் சென்று விட்டதால், இருக்கின்ற கட்சியினரை வைத்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பாமக அதிமுக கூட்டணிக்கு வராமல் போனது அவருக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை முன்வைத்து கிராமப்புற மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
சுகந்தி (மா.கம்யூ)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சுகந்தி அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களை நம்பியே களத்தில் உள்ளார். மதுராந்தகம் பகுதியில் பெரிய அளவில் கட்சியினர் இல்லாத காரணத்தால் குறைந்தபட்ச தொண்டர்களைக் கொண்டு தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் எந்த அளவுக்கு வாக்குகளை பிரிப்பார் என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. இருப்பினும் தங்களை எதிர்த்துப் போட்டியிடுவதால் தவெகவினரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
ஜானகிராமன் (நாம் தமிழர்)
ஜானகிராமன் எளிய வேட்பாளராக இருந்தாலும் கூட போதிய கட்டமைப்பு இல்லாதது அவருக்கு பெரிய பின்னடைவை தருகிறது. இருப்பினும் சீமான் ஒருவரின் முகத்தை காட்டி ஓரளவுக்கு வாக்குகளை வாங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அவர் டெபாசிட் வாங்குவாரா என்பதே கேள்விக்குறிதான். மொத்தத்தில் போட்டி தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் என்பது இன்றைய நிலவரம் ஆகும்.
தாக்கம் ஏற்படுமா?
மதுராந்தகம் தொகுதி மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய குடிநீர், விவசாயம், சாலை வசதி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே முக்கியமாக எதிர்பார்க்கின்றனர். எனவே, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகள் எவ்வாறு விவாதிக்கப்படுகின்றன, ஆளுங்கட்சியினர் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு என்ன விளக்கம் அளிக்கப்படுகிறது என்பதையும் வாக்காளர்கள் கவனிப்பார்கள் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சட்டமன்றத்தின் கண்ணியம், மக்கள் பிரச்னைகள் மீதான விவாதம் மற்றும் கேள்விகளுக்கு நேரடியான பதில் அளிக்கும் நடைமுறை ஆகியவை மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் எதிர் கட்சிகளால் முன்வைக்கப்படும் முக்கியமான விவாதப் பொருளாக மாறக்கூடும் என்பதே தற்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது.
ஆளுங்கட்சி மீதான விமர்சனம்:
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து எழும் விமர்சனங்களும் தேர்தல் களத்தில் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக மாற வாய்ப்புள்ளது. சமீபகால சட்டமன்ற நடவடிக்கைகளில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பேச்சு, உடல் மொழி, விவாதங்களில் பங்கேற்கும் விதம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சட்டமன்றத்தில் முதல்வர் பேசும்போது அவரது உடல் மொழி குறித்தும், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் விவாதங்களில் ஈடுபடும் விதம் குறித்தும் அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பேசுவதற்காக தயாரித்து வைத்த குறிப்புகளைக்கூட சில நேரங்களில் தடுமாறியபடி வாசிப்பதாகவும், முக்கியமான விவகாரங்களில் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல், சட்டமன்ற விவாதங்களின்போது ஏற்படும் கடுமையான வாக்குவாதங்கள், ஒருவருக்கொருவர் குறுக்கிட்டு பேசுதல், தனிப்பட்ட விமர்சனங்கள் உள்ளிட்டவை சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்களில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமாக, எதிர்க்கட்சியினர் எழுப்பும் தொகுதி பிரச்னைகள், சட்டம் ஒழுங்கு, விவசாயிகள் பிரச்னை, குடிநீர், சாலை வசதி, வேலைவாய்ப்பு, விலைவாசி, மின்தடை உள்ளிட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது முதல்வர் நேரடியாக பதில் அளிக்காமல் வேறு விவகாரங்களை பேசுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கேட்கப்பட்ட கேள்விக்கு உரிய பதில் கிடைத்ததா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுவதாக கூறப்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு
ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றாலும், சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்னைகளை விவாதிக்கும் இடம் என்பதால் அங்கு கண்ணியமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளின் செயல்பாடுகளை புள்ளி விவரங்களுடன் தெளிவாக எடுத்துரைப்பதுடன், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளிக்க வேண்டும்.