📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 09, 2026 04:04 PM

மோசடிகளைத் தடுக்க ‘சிங்பாஸ் பாஸ்கீ’ வசதி இனி ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் விரிவாக்கம், சிங்க‌ப்பூர் செய்திகள்

மோசடிகளைத் தடுக்க ‘சிங்பாஸ் பாஸ்கீ’ வசதி இனி ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் விரிவாக்கம், சிங்க‌ப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் மோசடிகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிங்பாஸ் பாஸ்கீ’ சேவை, தற்போது ஆண்ட்ராய்ட் கைப்பேசி பயனர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

போலி இணையத்தளங்கள் மூலம் நடைபெறும் மின்தூண்டிலிடல் சம்பவங்களில் மக்கள் மில்லியன் கணக்கான பணத்தை இழப்பதைத் தடுப்பதே தேசியச் சான்றளிப்பு அமைப்பான சிங்பாசின் இந்தப் புதிய சேவையின் முக்கிய நோக்கமாகும். போலி இணையப்பக்கங்கள் மூலமாக உள்நுழைய முயலும் முயற்சியை முறியடித்து, உண்மையான இணையத்தளங்களுக்கு மட்டுமே இது அணுகலை உறுதிசெய்கிறது.

இந்தத் தொழில்நுட்பம், சிங்பாஸ் தளத்துடன் இணைக்கப்பட்ட ஒவ்வோர் இணையத்தளத்துக்கும் ஒரு தனித்துவமான குறியாக்க விசையைப் பயன்படுத்துகிறது.

இதில் ஒரு பகுதி பயனரின் கைப்பேசியிலும் மற்றொரு பகுதி சிங்பாசின் முதன்மைச் சேவையகத்திலும் இருக்கும். இதனால், வழக்கமான மறைச்சொற்கள் அல்லது ‘கியூஆர்’ குறியீடுகள் போல இந்த ‘பாஸ்கீ’களை பிறருடன் பகிர்ந்துகொள்ளவோ தவறாகப் பயன்படுத்தவோ முடியாது. போலி இணையத்தளங்களில் இது செயல்படாது என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்கள் செப்டம்பர் 9ஆம் தேதி முதல், தங்களது சிங்பாஸ் செயலியின் அறிவிப்புகள் மூலம் பாஸ்கீயை உருவாக்குவதற்கான நினைவூட்டல்களைப் பெறுவர் என்று சிங்கப்பூர் அரசாங்கத் தொழில்நுட்ப முகவையான ’காவ்டெக்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் ஐஃபோன் பயனர்களுக்கு இந்த வசதி முதன்முதலில் வழங்கப்பட்டதில் இருந்து இதுவரை ஏறத்தாழ 800,000 பயனர்கள் பாஸ்கீயை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் ஏறத்தாழ 5.5 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள சிங்பாஸ் அமைப்பை காவ்டெக் நிர்வகித்து வருகிறது. ‘ஹெல்த்ஹப்’ சுகாதாரத் தளம், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் வரித் தளம், மத்திய சேமநிதி வாரியம், டிபிஎஸ் வங்கி, சிங்டெல் உள்ளிட்ட 1,400க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகள் மற்றும் தனியார் துறை சேவைகளுடன் சிங்பாஸ் பிணைக்கப்பட்டுள்ளது.

பாஸ்கீ சான்றளிப்பு முறையைப் பயன்படுத்த ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஆண்ட்ராய்ட் பயனர்கள் தங்களின் சிங்பாஸ் செயலியைப் புதுப்பித்து, அதில் தோன்றும் ‘create passkey’ எனுப்படும் பாஸ்கீயை உருவாக்கும் பிரிவைத் தொட்டு, திரையில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த வசதியைச் செயல்படுத்திக் கொள்ளலாம்.

ஒருமுறை பாஸ்கீ பதிவுசெய்யப்பட்டவுடன், பயனர்கள் தங்களது முகம் அல்லது விரல்ரேகையை சிங்பாஸ் செயலியில் வருடுவதன் மூலம் சான்றளிக்கப்பட்ட இணையத்தளங்களில் எளிதாக உள்நுழைய முடியும். அங்க அடையாள அமைப்பை அமைத்திராத பயனர்கள் தங்களது ஆறு இலக்கக் மறைச்சொல்லைப் பயன்படுத்தலாம். ஒவ்வோர் உள்நுழைவின்போதும், பயனர் சாதனத்திலுள்ள தனியுரிமைக் குறியீட்டைத் தனது அமைப்பில் உள்ள பொதுக் குறியீட்டுடன் ஒப்பிட்டு சிங்பாசின் முதன்மை அமைப்பு சரிபார்க்கிறது. பயனர்கள் ஒவ்வோர் இணையத்தளத்துக்கும் தனித்தனி குறியாக்க விசையைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.