📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 14, 2026 05:31 PM

மகளுக்குச் சட்டவிரோதமாக அரசு வேலை: கர்நாடக தேர்வாணையத் தலைவர் இடைநீக்கம்

மகளுக்குச் சட்டவிரோதமாக அரசு வேலை: கர்நாடக தேர்வாணையத் தலைவர் இடைநீக்கம்

பெங்களூரு: தனது மகளுக்கு போலிச் சான்றிதழ்கள் மூலம் சட்டவிரோதமாக அரசு வேலை வாங்கித் தந்த புகாரின்கீழ், கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா சஹுகர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் சிவசங்கரப்பா மீது ஒரு கடுமையான புகார் எழுந்தது.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அவர், தனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் ரூ.40,000 மட்டுமே என்று போலி வருமானச் சான்றிதழ் தயாரித்துள்ளார்.

இதன்மூலம் ‘கிரீமி லேயர்’ வரம்பில் இருந்து விலக்கு பெற்று, போலியான சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தித் தனது மகள் சுமாவிற்கு அரசு வேலை பெற்றுத் தந்தது விசாரணையில் அம்பலமானது.

ஆளுநர் நடவடிக்கை

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய சிவசங்கரப்பாமீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்குப் புகார்கள் அனுப்பப்பட்டன.

இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்திய ஆளுநர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

“சிவசங்கரப்பாமீதான புகார்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருப்பது முதற்கட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. எனவே, அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்,” என்று ஆளுநர் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து, அவரை நிரந்தரமாகப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் திரௌபதி முர்முவுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.