📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 10, 2026 02:30 PM

மின் வினியோக பாதிப்பால் இருளில் முழ்கிய சென்னை! துாக்கத்தை தொலைத்து நள்ளிரவில் போராடிய மக்கள்

மின் வினியோக பாதிப்பால் இருளில் முழ்கிய சென்னை! துாக்கத்தை தொலைத்து நள்ளிரவில் போராடிய மக்கள்

சென்னை: மின் வினியோக குளறுபடி காரணமாக, சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள், இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மின்தடை, பல இடங்களில் 8 மணி நேரத்தை கடந்து, அதிகாலை வரை நீடித்ததால், துாக்கத்தை தொலைத்த மக்கள் நிம்மதி இழந்து, சாலை மறியல், மின் வாரிய அலுவலகங்கள் முற்றுகை என, போராட்டங்களில் ஈடுபட்டனர். அலட்சியம் காட்டிய மின் வாரிய அதிகாரிகளையும் வறுத்தெடுத்தனர்.

கோடை வெயில் வெப்பத்தின் தாக்கம், அக்னி நட்சத்திரத்திற்கு பின் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை முழுதும், 40 டிகிரி செல்ஷியஸை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட வற்றில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால், அதிக சுமை தாங்காமல் மின்மாற்றிகள், மின் இணைப்பு பெட்டிகள் மற்றும் மின் வடங்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால், திடீரென மின் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. பழுது நீக்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

சென்னையின் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. அரை மணி நேரம் துவங்கி எட்டு மணி நேரம் வரை மின்தடை நீடித்தது. இதனால், புழுக்கம் தாங்க முடியாமல், குழந்தைகள், நோயாளிகள், முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால், ஆத்திரம் அடையும் மக்கள் வேறு வழியின்றி வீதிகளில் இறங்கி சாலை மறியல், மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகை என, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பத்துார் கடந்த 5ம் தேதி மின்தடையை கண்டித்து, அம்பத்துார் கள்ளிக்குப்பம் ஆர்ச் அருகே உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். இங்கு, நேற்று மாலை 4:00 மணி முதல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

இரவு 9:30 மணியளவில், அம்பத்துாரின் 80 சதவீத பகுதிகளுக்கும் மேல் இருளில் மூழ்கின.

இரவு 10:30 மணியளவில், 50க்கும் மேற்பட்டோர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரம், மேனாம்பேடு, புதுார், மூகாம்பிகை நகர், கங்கை நகர், பட்டரை வாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், 250க்கும் மேற்பட்டோர், அம்பத்துார் -- செங்குன்றம் சாலையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சு நடத்தியும் பொதுமக்கள் மறியலை கைவிடாததால், அம்பத்துார் -- செங்குன்றம் நெடுஞ்சாலையின் இருபுறமும், 2 கி.மீ., துாரத்துக்கு அரசு பேருந்துகள், கன்டெய்னர் லாரிகள் என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நான்கு மணி நேரத்திற்கு பின், நள்ளிரவு 1:30 மணியளவில், ஒவ்வொரு பகுதியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

மறியலில் ஈடுபட்டோர் கூறுகையில், 'மாற்றம் வேண்டும் என்று தான், த.வெ.க.,விற்கு ஓட்டு போட்டோம். 'ஆனால், மின்தடை தொடர்பாக பலமுறை பிரச்னை ஏற்பட்ட போதும், அம்பத்துார் த.வெ.க., - எம்.எல்.ஏ., பாலமுருகன், ஒருமுறை கூட இப்பகுதிக்கு வரவில்லை' என்றனர்.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி, அசோகா நகர், துரைசாமி ராஜா தெரு, பீட்டர் ராஜா தெரு, நடராஜன் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், பல மணி நேரம் மின்தடை நீடித்தது.

ஆத்திரமடைந்த மக்கள், அரும்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். அமைந்தகரை, அயனாவரம் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளிலும், மின்தடையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

அரும்பாக்கம் மின் வாரியத்தில் குவிந்த மக்கள் கூறுகையில், 'ஒரு நாள் மட்டுமல்ல, தினமும் இரவில் மின்தடை ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நிரந்தர தீர்வு காணப்படவில்லை. போலீசாரை வைத்து விரட்டுகின்றனர்' என குற்றம் சாட்டினர்.

குன்றத்துார் அருகே உள்ள மாங்காடு நகராட்சி யில் ஜனனி நகர், சீனிவாசா நகர், ரகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடையை கண்டித்து, சீனிவாச நகரில் நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மாங்காடு போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.

ராமாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது. வீடுகளுக்குள் புழுக்கம் தாங்க முடியாமல் பலர் வெளியேறிய நிலையில், துாங்க முடியாமல் குழந்தைகள் அழும் சத்தம், இரவு முழுதும் கேட்டுக் கொண்டிருந்தது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'ராமாபுரம் துணை மின் நிலைய மின் கேபிள், சபரி நகர் அருகே பிற துறை பணிகளால் சேதமடைந்தது. 'இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்ட பின், அதிகாலை மின் வினியோகம் சீரானது' என்றனர்.

திருநின்றவூரில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், கோமதிபுரம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு, மின்தடை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பகுதிமக்கள், கோமதிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காததால், 100க்கும் மேற்பட்டோர் கோமதிபுரம் பிரதான சாலையில், மறியலில் ஈடுபட்டனர்; திருநின்றவூர் போலீசார் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். மூன்று மணி நேரத்திற்கு பின் மின் வினியோகம் செய்யப்பட்டது.

ஜமீன் பல்லாவரம், ராஜாஜி நகரில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. இது தொடர்பான புகார் எண்ணிற்கு போன் செய்தால், எந்த பதிலும் இல்லை. இரவு முழுதும் சப்ளை இல்லாததால், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

நேற்று காலை 8:00 மணிக்கு அப்பகுதி வந்த மின்வாரிய ஊழியர்கள், ராஜாஜி நகரில் உள்ள மின்மாற்றி பழுதாகிவிட்டதாக கூறி, அதை மாற்றும் நட வடிக்கையில் இறங்கினர்.

பின், நேற்று மதியம் 12:00 மணிக்கு மின் வினியோகம் சீரானது. தொடர்ந்து 12 மணி நேர மின் தடையால், அவசர தேவைகளுக்கு தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டனர்.

 கொடுங்கையூர் - கண்ணதாசன் நகர், 1 - 4 பிளாக் வரையுள்ள குடியிருப்புகளில் மின்தடை ஏற்பட்டது. இதை கண்டித்து, அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த, த.வெ.க., வடசென்னை மாவட்ட செயலர் சிவா, அவர்களை சமாதானம் செய்தார். மின்வாரிய உதவி செயற்பொறியாளரை அழைத்து, மின்தடைக்கு தீர்வு காண கோரினார். பின், முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

வேளச்சேரி அடுத்த மேடவாக்கம் புஷ்பா நகர், பாபு நகர், ஜல்லடியன்பேட்டை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, புதுநகர், பல்லவன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் ஏற்பட்ட மின்தடை, நள்ளிரவு வரை நீடித்தது.

ஆத்திரமடைந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தில் திரண்டனர். அங்கு எவரும் பணியில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. மேடவாக்கம் போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். நான்கு மணி நேரத்திற்கு பின், மின் வினியோகம் செய்யப்பட்டது.

மடிப்பாக்கம் மின் வாரிய எல்லைக்குட்பட்ட 187, 188வது வார்டுகளில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் மின் வினியோகம் தடை பட்டது. மின்வாரிய அலு வலகத்தை தொடர்பு கொண்டும் யாரும் அழைப்பை எடுக்காத நிலையில், பொதுமக்கள் மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு பின், படிப்படியாக மின் வினியோகம் செய்யப்பட்டு, அதிகாலை 3:00 மணியளவில் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் வந்துள்ளது.

திருவொற்றியூர் ராம கிருஷ்ணா நகர், பாரதியார் நகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டு, மூன்று மணி நேரம் கழித்து மின் வினியோகம் சீரானது.

இதுபோன்று, சென்னையில் பெரும்பாலான பகுதிகளில், ஒரே இரவில் மின்தடை ஏற்பட்ட தால், மக்கள் பெரிதும் திண்டாடினர்.

இதுபோன்ற மின்தடை மீண்டும் தொடராத வகையில், அரசும், மின் வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் விருப்பம். இதேபோன்று, நேற்றும் சைதாப்பேட்டை உட்பட பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

ஆவடி, 41வது வார்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 3வது பிளாக்கில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பு பெட்டியில் பழுது நீக்க சென்றபோது, அதில் பொருத்தப்பட்டிருந்த, 14 'பியூஸ் கேரியர்கள்' திருடப்பட்டிருந்தன. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்,் ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், 'பியூஸ் கேரியர்களை' திருடி சென்றது பதிவாகி இருந்தது. வாகன பதிவெண்ணை வைத்து விசாரித்து, தினேஷ்குமார், 19, வினித்ராஜ், 20, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இருவரும், இரண்டு மாதங்களில், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில், மின் இணைப்பு பெட்டியில் இருந்து, 168 பியூஸ் கேரியர்களை திருடியுள்ளனர். ஆவடியில் திருடிய பியூஸ் கேரியர்களை, சூரப்பேட்டையில் உள்ள காயலான் கடையில், 1,500 ரூபாய்க்கு விற்று மது அருந்தியது தெரிய வந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வியாசர்பாடி, எம்.கே.பி., நகர் - 18வது மேற்கு குறுக்கு தெரு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, மின்மாற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அதனருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவும் தீக்கிரையானது. சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். மின்மாற்றி பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுதும் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள், நேற்று காலை முதல் தீ விபத்தில் சேதமான மின்மாற்றியை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்தடை காரணமாக அப் பகுதியில், 2,000க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படிக்கும், இரண்டு தனியார் பள்ளிகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப் பட்டது. குப்பையால் தீ விபத்து ஓட்டேரி, கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள பொடி கடை பேருந்து நிலையம் அருகே, நேற்று அதிகாலை 5:00 மணியளவில் சாலையோரம் இருந்த மின்மாற்றி தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். குப்பை கழிவுகளில் ஏற்பட்ட தீ விபத்தால், அதன் தீப்பொறி டிரான்ஸ்பார்மரில் பட்டு எரிந்தது தெரிய வந்தது. ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

செங்கல்பட்டைச் சேர்ந்தவர் விக்ரமன், 40; மாங்காடு மின்வாரிய அலுவலக ஊழியர். மாங்காடு நகராட்சி சீனிவாசா நகரில் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. அங்கு சென்ற விக்ரமன், மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

TNEA இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி - 2026