Meesaya Murukku 2 Review: மீசைய முறுக்கு 2 விமர்சனம்.. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பக்கா கச்சேரி!
சென்னை: 2017ம் ஆண்டு மீசைய முறுக்கு படத்தை இயக்கி நடித்து ஹிட் கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி 2026ல் மீண்டும் மீசைய முறுக்கு டைட்டிலை கையிலெடுத்து அதன் 2ம் பாகத்தை கொடுத்துள்ளார். செப்டம்பர் 25ம் தேதியான இன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு இசை கச்சேரியை கண்டிப்பாக இந்த படம் கொடுக்கப்போகிறது.
படத்தின் துவக்கத்திலேயே "பப்பாளி பழமே" பாடலில் தொடங்கும் படம் கடைசி வரை ஏகப்பட்ட ஹிட் பாடல்களால் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. ஜென் ஸி இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவரும் விதத்தில் இந்த படத்தையும் எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
இந்த வாரம் தியேட்டர்களில் அனைத்து வயதினரும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப் போகும் படமாக இந்த படம் அமைந்துள்ளதா? இதில் உள்ள பிளஸ் மற்றும் மைனஸ் உள்ளிட்ட விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
மீசையை முறுக்கு 2 கதை: முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் இது புதிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் இடம்பெற்ற ஒரு சில கதாபாத்திரங்கள் இந்த பாகத்தில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களை செமையாக கனெக்ட் செய்கின்றன.
கானா பாடல்களை கலக்கலாக பாடும் தாஸ் திறமையை பார்த்து பெரிய மியூசிக் லேபிளின் வாரிசு அவரை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து வருகிறார். ஆனால், அங்கே உள்ள சிஸ்டம் காரணமாக தாஸுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அங்கிருந்து கட் ஆகும் கதை தாஸின் பேரன் ஜீவா (ஹிப்ஹாப் தமிழா ஆதி) ஒரு சாதாரண பப்பில் கேப் கிடைக்கும் போது தனது ஹிப்ஹாப் பாடல்களை பாட முயற்சிக்கும் நபராக அறிமுகம் ஆகிறார்.
அவரது திறமையை பார்த்து சொக்கிப் போகும் ஷீலா (கெத்திகா சர்மா), வாரிசு நடிகர் ஒருவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால், ஜீவாவை அந்த நெப்போ கிட் அசிங்கப்படுத்த இருவருக்கும் இடையே கை கலப்பு நடக்கிறது.
அதன் பின்னர் ஜீவாவுக்கு அவங்க தாத்தா தாஸ், அப்பா டைகர் சிவாவின் கதையை சொல்கிறார். அப்பாவின் இசை திறமையும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் கிடைக்க முடியாமல் போகும் அளவுக்கு என்ன நடந்தது? சாதாரண பஸ் டிரைவராக தனது மகனை வளர்த்து ஆளாக்க அவர் செய்த தியாகங்கள் தெரிய வர அதன் பின்னர் ஜீவா தனது லட்சியத்தை நோக்கி பயணித்தாரா? அல்லது நம்மள மாதிரியான ஆட்களுக்கு இதெல்லாம் செட் ஆகாது என வேலை பார்க்க போய்விட்டாரா? என்பது தான் இந்த மீசையை முறுக்கு 2 கதை.
படம் எப்படி இருக்கு?: ஹிப்ஹாப் தமிழா ஆதி தாஸ், டைகர் சிவா மற்றும் ஜீவா என 3 காலகட்ட இளைஞராக நடித்த விதம் அட்டகாசம். பப்பாளி பழமே, அவ ஆரா 10/10, கலைவாணியே, கோயிந்தம்மா உள்ளிட்ட பாடல்கள் தியேட்டர்களில் கச்சேரி நடத்துகின்றன. ஜி.வி. பிரகாஷ் மாதிரி ஹிப்ஹாப் ஆதியும் ஒரு பக்கம் மியூசிக் போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் நடிக்கலாம். நீண்ட நாள் கழித்து பாடல்களால் ஒரு படம் ஹிட் அடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாடல்களை தாண்டி படத்தின் கதை மற்றும் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. கர்நாடக சங்கீதம் vs கானா மோதல்கள், அந்த வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், நடக்கும் பிரச்னைகள், தூக்கி விட யாரும் இல்லாமல் தனியாக போராடி மேலே வரத் துடிக்கும் இளைஞர்களின் கனவுகள் என படம் முழுக்க ஏகப்பட்ட பாசிட்டிவிட்டி கொட்டிக் கிடக்கிறது. முதல் பாதி, பாடல்கள், காமெடி என சென்றாலும், இரண்டாவது பாதி செம பிளாஸ்ட்டாக மாறியுள்ளது.
சாதாரணமாக கோயிலில் அப்பா நாசர் மற்றும் மகள் ரம்யா ரங்கநாதன் சந்திக்கும் காட்சியில் வரும் ஒரு வாய்ஸ் ஓவர் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விடுகிறது. அதே போல எந்த சாதியினரின் மனதையும் புண்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் போராடி ஜெயித்தால் அனைவருமே பாராட்டுவார்கள் என்பதை காட்டிய விதம் கைதட்ட வைக்கிறது.
பிளஸ்: கருணாஸ் மற்றும் பாபா பாஸ்கரை படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பயன்படுத்திய விதம் அருமையாக உள்ளது. நாசரை டீ ஏஜிங் செய்து காண்பித்த காட்சியில் மெனக்கெடல் பக்காவாக தெரிகிறது. கானா பாடல் குறித்து ரம்யா ரங்கநாதன் ஹீரோ ஆதியிடம் பேசும் வசனங்கள், ஒரே இடத்தில் ஆரம்பித்தால் தான் ரேஸ் என வசனத்திலும் ஆதி ஸ்கோர் செய்துள்ளார். சைத்ரா ஆச்சர், கெத்திகா சர்மாவை விட நடிப்பில் ரம்யா ரங்கநாதன் ஒருபடி மேல் ஸ்கோர் செய்யும் அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் சிறப்பு. 3 காலங்களை காட்ட கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் போட்ட மெனக்கெடல்களும், குஷ்பு - சுந்தர்.சியின் தயாரிப்பும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.
மைனஸ்: முதல் பாதியில் யோகி பாபு, அர்ஷத் கான் உடன் ஹிப்ஹாப் ஆதி செய்யும் சில காமெடிக் காட்சிகள், அந்த டிராக் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். அதே போல வில்லன் போர்ஷன் ரொம்பவே வீக் ஆக உள்ளது. மெயின் வில்லன் என யாருமே இல்லாமல், சிஸ்டத்தையும் காலத்தையும் வில்லன் ஆக்கியிருப்பது. ரம்யா ரங்கநாதனுக்கு ஏற்படும் முடிவு உள்ளிட்டவை கன்வின்சிங்காக இல்லை. ஆனால், படத்தின் மையப்புள்ளியான நெப்போடிசத்துக்கு கொடுத்த அந்த விளக்கம் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. "நம்ம புள்ள நல்லா இருக்கணும்னு எந்தவொரு தந்தையும் நினைக்கலாம்.. அதுல தப்பு இல்லை.. நம்ம புள்ள மட்டும் தான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தான் தப்பு". மீசையை முறுக்கு 2 படத்தை தாராளமாக தியேட்டர்களில் பார்த்து ஜாலியாக என்ஜாய் பண்ணலாம்.