📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 10, 2026 02:30 PM

ரூ.100 கோடி நிலுவை: நுகர்பொருள் வாணிபக் கழகத்தைக் கண்டித்து விழுப்புரம் விவசாயிகள் காதில் பூ சுற்றி நூதனப் போராட்டம்

ரூ.100 கோடி நிலுவை: நுகர்பொருள் வாணிபக் கழகத்தைக் கண்டித்து விழுப்புரம் விவசாயிகள் காதில் பூ சுற்றி நூதனப் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகை சுமார் 100 கோடி ரூபாயை கடந்த மூன்று மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்து வரும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தைக் கண்டித்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காதில் பூ வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுடன், செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த விவசாயிகளுக்கு, கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமே மிஞ்சியது. இதன் விளைவாக, தங்களை அதிகாரிகள் ஏமாற்றுவதை உணர்த்தும் வகையில் இந்த வித்தியாசமான போராட்டம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர். வழக்கமாக, நெல்லைப் பெற்றுக்கொண்ட பின் அதிகாரிகளால் விவசாயிகளுக்குத் டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் விநியோகிக்கப்பட்ட 20 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கிப் கணக்குகளில் நெல்லுக்கான பணம் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நெல்லை ஒப்படைத்துவிட்டு டோக்கன்களைப் பெற்றுக்கொண்டனர். ஆனால், அதே காலகட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கான தொகையை பட்டுவாடா செய்யாமல் நிறுத்தி வைத்தது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக சுமார் ரூ.100 கோடி அளவிலான விவசாயிகளின் பணம் முடங்கிக் கிடக்கிறது.

தற்போது தேர்தல் முடிந்து விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையிலும், தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையைக் கேட்டு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளை விவசாயிகள் அணுகியுள்ளனர். ஆனால், அதிகாரிகள் முறையான பதிலை அளிக்காமல் தொடர்ந்து காலந்தாழ்த்தி, விவசாயிகளை அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தங்களது கோரிக்கை மனுக்களுடன் நெல் பணத்தைக் கேட்க நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று கூட்டம் நடைபெறவில்லை என்பதோடு, எந்தவொரு உயர் அதிகாரியும் அங்கு வரவில்லை. இதனால் கடும் மனவேதனையடைந்த விவசாயிகள், அரசு தங்களை ஏமாற்றுவதைக் கண்டிக்கும் விதமாக, சரம் சரமாகப் பூக்களை வாங்கித் தங்களது காதுகளில் வைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசுக்கு எதிராக முழக்கமிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்