📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 04, 2026 08:00 AM

மெஸ்ஸி அணிக்கு மரண பயத்தை காட்டிய கேப் வெர்டே.. அர்ஜென்டினா போராடி வெற்றி!

மெஸ்ஸி அணிக்கு மரண பயத்தை காட்டிய கேப் வெர்டே.. அர்ஜென்டினா போராடி வெற்றி!

மெஸ்ஸி அணிக்கு மரண பயத்தை காட்டிய கேப் வெர்டே.. அர்ஜென்டினா போராடி வெற்றி!

மியாமி: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், பலம் குறைந்த கேப் வெர்டே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். போட்டி முடிவு வெற்றி என்பதாக இருந்தாலும் அர்ஜென்டினா அணி இந்தப் போட்டியில் தோல்வி பயத்தை கண்ட பின் தான் போராடி வென்றது.

மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது 30-வது உலகக் கோப்பை ஆட்டத்தில் களம் இறங்கி புதிய சாதனை படைத்தார். ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் லிசாண்ட்ரோ மார்டினெஸ் கொடுத்த பாஸை பயன்படுத்தி மெஸ்ஸி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 20-வது உலகக் கோப்பை கோலை அடித்து அர்ஜென்டினாவை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். உலகக் கோப்பை வரலாற்றில் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார்.

அதே சமயம், அறிமுக அணியான கேப் வெர்டே அர்ஜென்டினாவை கதிகலங்க வைத்தது. இரண்டாவது பாதியில் கேப் வெர்டே அணியின் டெராய் டூர்டே கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இதனால் 90 நிமிட முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் ஆரம்பத்தில் லிசாண்ட்ரோ மார்டினெஸ் கோல் அடித்து அர்ஜென்டினாவை 2-1 என முன்னிலைப்படுத்தினார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே கேப் வெர்டே அணியின் லாரோஸ் கப்ராலின் அற்புதமான கோலால் ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலையை எட்டியது.

போட்டி பெனால்டி ஷூட்-அவுட்டை நோக்கிச் சென்ற நிலையில், கூடுதல் நேரத்தின் இறுதி கட்டத்தில் கிறிஸ்டியன் ரொமேரோ அடித்த ஹெட்டர், எதிரணி வீரர் டைனி போர்ஜஸ் உடலில் பட்டு அதிர்ஷ்டவசமாக கோலாக மாறியது. இதனால் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா பல ஆபத்தான கோல் முயற்சிகளைத் தடுத்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எகிப்து அணியை எதிர்கொள்ளத் தகுதி பெற்றுள்ளது.