Lenin Pandian Cheyyaru Balu's Review
சென்னை: சிவாஜியின் பேரன் தர்ஷன், ரோஜா, கங்கை அமரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் லெனின் பாண்டியன். இளையராஜா இசையமைத்திருக்கிறார். பாலச்சந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு இந்தப் படம் குறித்து தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "இந்தப் படத்தின் முதல் பாதி சூப்பராக இருந்தது. கடகடவென்று போனது. இயக்குநர் ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை சொல்ல வருகிறார் என்று தோன்றியது. இடதுசாரி சிந்தனையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறது. ஜார்ஜ் மரியானுக்கு நீதிபதி கேரக்டரை கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு ஏன் அந்தக் கேரக்டர் என்று தோன்றியது. அடுத்தடுத்த காட்சிகள், அவருக்கு கொடுத்ததுதான் சரி என்று தோன்றியது.
அந்தக் காட்சி: அவரிடம் ஒருவர் தனது பசங்களுக்கு காதுகுத்து வைத்திருக்கிறேன் என சொல்லி அழைப்பிதழை கொடுப்பார். அந்த பத்திரிகையில் இருக்கும் ஊரை பார்ப்பார். உடனே ஜார்ஜ் அந்த ஊரை குறிப்பிட்டு, 'இந்த ஊரில் என் அப்பா காலத்தில் நாங்கள் எல்லாம் செருப்பை கழற்றி கக்கத்தில் வைத்துக்கொண்டுதான் போக வேண்டும். இன்று நான் படித்து முன்னேறி இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அதனால் இந்த விழாவுக்கு என்னை தலைமை தாங்க சொல்கிறாய். எனில் இந்தப் படிப்பு எவ்வளவு முக்கியம், அதிகாரம் எவ்வளவு முக்கியம் என சொல்வார். இப்படி ஒரு அற்புதமான கருத்தை அவர் சொல்வார்.
கங்கை அமரன் எதற்கு?: இதையெல்லாம் மீறி இந்தக் கதைக்கு கங்கை அமரன் எதற்கு என்று தோன்றும். அப்பாவியாக நடித்திருக்கிறார். அவரை எல்லோரும் ஏமாற்றுவார்கள்.அவரை பார்த்து பரிதாபப்பட்டு ரோஜா திருமணம் செய்துகொள்வார். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் அன்யோன்யம் எல்லாம் அழகாக இருக்கிறது. காளான் குழம்பு வைக்க சொல்வது எல்லாம் சூப்பராக இருக்கும். அவர்களுக்கான காட்சியில் இளையராஜா முதல் மரியாதை பிஜிஎம்மை போடுகிறார். ரசனையோடு, குசும்போடுதான் அப்படி செய்திருக்கிறார்.
ஆரம்பத்தில் அப்படி இருந்தது: ரோஜா, கங்கை அமரன் கெமிஸ்ரி ஆரம்பத்தில் கனெக்ட் ஆகவிட்டாலும்; கதை போகப்போக சூப்பராக இருந்தது. முதல் பாதியில் யூகிக்க முடியாத அளவுக்கு சீன்களை செய்திருக்கிறார். இவருக்கு இதுதான் முதல் படம். சத்யஜோதி பேனரில் அறிமுகமாகியிருக்கிறார். அந்த பேனரில் அறிமுகமானவர்கள் எல்லாம் பெரிய இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள்.
சிவாஜி பேரன் எப்படி?: அதேபோல் சிவாஜியின் பேரன் நடித்திருக்கிறார். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பதற்கேற்ப இவரது நடிப்பு இருக்கிறது. முதல் படம் மாதிரியே தெரியவில்லை. ஹீரோயினாக நடித்திருக்கும் பெண்ணும் சூப்பராக நடித்திருக்கிறார். இளையராஜாவின் இசை எவர் க்ரீன் என்பதை இதிலும் அவர் நிரூபித்திருக்கிறார். இரண்டாவது பாதி முழுக்க முழுக்க சென்ட்டிமென்ட்டுக்குள் போய்விடுகிறது. கதை வலுவாக இருக்கிறது. திரைக்கதையும் அருமை. சில விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடக்குமா என்று தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் சரி செய்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்" என்றார்.