📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 12, 2026 09:04 AM

கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளின் மாத்திரை கவர்களில் இந்தி... சர்ச்சையும் பின்னணியும் என்ன?

கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளின்
மாத்திரை கவர்களில் இந்தி... சர்ச்சையும் பின்னணியும் என்ன?

கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளின் மாத்திரை கவர்களில் இந்தி... சர்ச்சையும் பின்னணியும் என்ன?

இந்தி எதிர்ப்பில், ஒரு காலத்தில் நாம் மற்ற மாநிலத்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தோம். இன்று அந்தத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.

மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் இந்தி மொழி சர்ச்சை ஓய்வதற்குள், கோவை மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகளின் மாத்திரை கவர்களில் இந்தி மொழிக் குறிப்புகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் வைரலாகி, மீண்டும் சர்ச்சையானது. அதை தொடர்ந்து, மாத்திரை கவர்களில் இந்தி மொழி குறிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

கோவை, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வந்த மாத்திரை கவர்களில், பொதுவாக இடம்பெறும் மாத்திரை சாப்பிடும் வேளை மற்றும் எப்போது சாப்பிட வேண்டுமென்ற குறிப்புகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியில் அச்சடிக்கப்பட்டிருந்தன. இதேபோல, கரூர் அரசு மருத்துவமனை மாத்திரை கவர்களிலும் இந்தி மொழி குறிப்புகள் இடம்பெற்றன. அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் முதல் சமூகச் செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பினரும் அதற்குக் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, இந்தி குறிப்புகள் கொண்ட மாத்திரை கவர்கள் அகற்றப்பட்டு, வழக்கம்போல தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி குறிப்புகளைக் கொண்ட மாத்திரை கவர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

`இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அவ்வளவு பெரிய குற்றமா?’

இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ``மருத்துவமனையின் வாசலுக்குள்ளும் மொழி அரசியலை இழுத்து வருவது, `வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்ற நமது பெருமைக்குரிய அடையாளத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் செயல். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைக் கவர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அவ்வளவு பெரிய குற்றமா? இது இந்தித் திணிப்பு குறித்த விவாதமே அல்ல. மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைத் தகவல், அதை வாங்கும் நோயாளிக்குப் புரிய வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியம்’’ என்று தெரிவித்திருந்தார்.

`இந்தி தேசிய மொழியோ, ஆட்சி மொழியோ அல்ல!’

இது குறித்து, தி.மு.க கல்வியாளர் அணி மாநிலத் தலைவர் செந்தலை ந.கவுதமன் விரிவாகப் பேசினார். “இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. கடந்த 1950-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலைப்பு சட்டப்படி இந்தியும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கும் எனவும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1965-ம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. அதை எதிர்த்துதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. இதனால் ஒன்றிய அரசு பின்வாங்கியது.

இருந்தாலும் இந்தியைத் திணிக்க வேண்டுமென்ற முயற்சி காலங்காலமாக நடந்து வருகிறது. இந்தியா என்றாலே இந்திதான், இந்தி மொழி பேசுபவர்கள்தான் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்ற மனநிலை உள்ளது. ஆனால், அரசியல் சட்டப்படி இந்தி தேசிய மொழியோ, ஆட்சி மொழியோ அல்ல. உண்மையில், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 22 மொழிகளும் தேசிய மொழிகளுக்கான அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஆனால், நம்மில் பலரே கூட அதை அறியாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை பிராந்திய மொழிகள் என்றுதான் சொல்லி வருகிறோம்.

`இந்தி குறிப்புகள்... ஆழம் பார்க்கும் முயற்சி!’

இந்தி மொழி பேசும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலை பெயர் பலகை மற்றும் அரசு மருத்துவமனை மருந்து கவர்களில் இந்தி இடம் பெறுவது என்பது, `ஒரு காலத்தில் எப்படியாவது இந்தியைக் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்ற நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியே. ஆழம் பார்ப்பதற்கு இதுபோன்ற செயல்களைச் செய்வதும், எதிர்ப்பு வந்தால் பின்வாங்குவதும் பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வரும் இந்தி மொழி பேசுபவர்கள் தமிழ், ஆங்கிலம் கற்க மாட்டார்களா? ஒருவேளை அப்படித் தெரியவில்லை என்றாலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் போனில் கூட எளிதாக மொழி பெயர்க்கும் வசதிகள் வந்துவிட்டனவே?

முதலில், இந்தி படிப்பவர்களுக்குத்தான் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால், இந்தி படித்தவர்கள்தான் வேலை தேடி நம் மாநிலத்துக்கு வருகிறார்கள். இந்தி மட்டுமன்றி, வங்காளம், மராத்தி போன்ற மொழிகளை பேசுபவர்களும்தான் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். இந்தி பேசு பவர்களுக்குப் புரியும் வகையில் இந்தியைப் பயன்படுத்துவதுபோல, மற்றவர்களுக்கும் புரியும் வகையில் மற்ற மொழிகளைப் பயன்படுத்த முடியுமா? எந்த மாநிலத்திற்கு, நாட்டிற்குச் செல்கிறோமோ அந்த மொழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, நமக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே அங்கிருப்பவர்களும் பேச வேண்டும் என நினைப்பது ஏற்புடையதல்ல.

‘இந்தி எதிர்ப்பில் வழிகாட்டி தன்மையை இழக்கிறோம்!’

இந்தி மொழி திணிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மராட்டியத்திலும், கர்நாடகாவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மராத்தி தெரிந்தால்தான் மராட்டியத்தில் ஒட்டுநர் உரிமம் பெற முடியும் எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அனைத்துப் பள்ளிகளிலும் நான்காம் வகுப்பு வரை கன்னடம் மட்டுமே பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் ஒரு பாடமாகவும் மட்டுமே உள்ளது. இதை நாம் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது.

‘இந்தி குறிப்பு கவர்கள்... நிறுத்திவிட்டோம்!’

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதுபோல மூன்று மொழிகளை கொண்ட மாத்திரை கவர்கள்தான் வழங்கப்பட்டு வருகின்றன. சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் இந்த கவர்களுக்கான செலவை, சில தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. வட மாநிலத்தவர்களுக்கும் புரியும் வகையில் இந்தியும் இடம்பெற்றிருந்தது. சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது, இந்தி குறிப்புகள் உள்ள பழைய மருந்து கவர்களில் மாத்திரைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே குறிப்புகள் உள்ள வகையிலான புதிய கவரில் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றனர்.

இந்தி மொழி பிரச்னை அல்ல. இந்தி திணிப்பே பிரச்னை!