📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 03, 2026 10:03 PM

ஜோகூர் பட்டத்து இளவரசரின் சிங்கப்பூர் நில விற்பனை: பெரும் வரி சிக்கல்

ஜோகூர் பட்டத்து இளவரசரின் சிங்கப்பூர் நில விற்பனை: பெரும் வரி சிக்கல்

சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தமக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய ஜோகூர் பட்டத்து இளவரசரும் மலேசிய மாமன்னர் இப்ராஹிம் இஸ்கந்தரின் மூத்த மகனுமான இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிம் திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நில மேம்பாட்டு வரி விதிக்கப்படலாம் என்பது பெருந்தடையாக உருவெடுத்துள்ளது.

மலேசிய மாமன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் இருக்கும் நிலையில், ஜோகூரின் தற்காலிக ஆட்சியாளர் பொறுப்பை வகிக்கும் இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிம், சிங்கப்பூரில் உள்ள தமக்குச் சொந்தமான 16.6 ஹெக்டர் நிலத்தை விற்பனை செய்ய முயன்று வருகிறார்.

இது, 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலப் பரிமாற்றத்தின் மூலம் பெறப்பட்ட நிலப்பகுதியாகும்.

இதன்மூலம் அவருக்குச் சொந்தமான நிலத்தில் ஏதேனும் கட்டடங்கள் கட்டப்பட்டால், அது யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளமான பூமலையிலிருந்து சற்று தூரத்தில் அமைந்திருக்கும்.

தமது நிலப்பகுதியில் குடியிருப்புக் கட்டடங்களைக் கட்ட இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிம் விண்ணப்பம் செய்திருந்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலத்தில் ஜிசிபி எனப்படும் உயர்தர சொகுசு பங்களாக்கள் மற்றும் ஐந்து மாடி அல்லது அதற்கும் குறைவான மாடிகளைக் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு ஏதுவாக, நிலப் பயன்பாட்டை மாற்றியமைக்க ஆணையம் கடந்த மார்ச் மாதத்தில் பரிந்துரைத்திருந்தது.

அரசாங்கத்தின் அனுமதியால் நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும்போது விதிக்கப்படும் இந்த நில மேம்பாட்டு வரியை, நிலத்தை வாங்கும் தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என இளவரசர் இஸ்மாயில் விரும்புவதாகத் தெரிகிறது.

ஆனால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பல சொத்து மேம்பாட்டாளர்கள் இந்த அதிகப்படியான செலவாலும் துல்லியமான வரித் தொகை குறித்த நிச்சயமற்ற தன்மையாலும் அதனை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நில மேம்பாட்டு வரி ஏறத்தாழ $3 பில்லியன் வரை இருக்கக்கூடும் என்று சொத்து மதிப்பு நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நிலப் பயன்பாடு மாற்றப்பட்டால், நிலத்தின் மதிப்பு S$3.8 பில்லியன் முதல் S$4.7 பில்லியன் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.