ஜன நாயகன் கம்மிங்.. ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ தள்ளிப்போகுதா?.. ஜூலை 1க்கு பிறகு அமைதியான லைகா!
சென்னை: முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை கேவிஎன் நிறுவனம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது பல பட தயாரிப்பாளர்களுக்கும் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
இந்த வாரம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட மாதவனின் 'ஜிடி நாயுடு' பயோபிக் திரைப்படம் கூட அடுத்த மாதத்துக்கு தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்பே டயானா திரைப்படம் மட்டும் இந்த வாரம் தில்லாக வெளியாகிறது.
ஜூலை 24ம் தேதி ஜன நாயகன் ரிலீஸ் என ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள் எல்லாம் உறுதியாக கூறி வரும் நிலையில், ஜூலை 31ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படங்களின் வெளியீட்டை தள்ளிப் போடும் முடிவுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் வந்து விட்டதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
விஜய்யின் கடைசி படம்: ஜன நாயகன் திரைப்படம் ஏற்கனவே ஹெச்டி பிரின்ட் லீக்காகி சுமார் 1.2 கோடி பேர் பார்த்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையிலும், முதலமைச்சராக விஜய் மாறிய நிலையில், அவரது படம் வெளியானால் இப்போதும் முதல் நாள் ஓபனிங் பெரிதாக இருக்கும் என்றும் குறைந்தபட்சம் 2 வாரங்கள் படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 24ம் தேதி ஜன நாயகன் வெளியானால் ஜூலை 31ல் ரிலீஸ் ஆகும் படங்களுக்கும் தியேட்டர்கள் அதிகளவில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர்.
சைலன்ட்டான லைகா: இந்த மாதம் ஜூலை 1ம் தேதி செம ஹேப்பியாக போட்டோக்களை வெளியிட்டு ஜூலை 31ம் தேதி சிக்மா படம் வெளியாகும் என லைகா அறிவித்தது. டப்பிங்கை முடித்து விட்டேன் படம் ஜூலை 31ம் தேதி ரிலீஸ் ஆகும் என சந்தீப் கிஷனும் ஜேசன் சஞ்சய் உடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்திருந்தார். ஆனால், அதன் பின்னர், லைகா நிறுவனமும் சிக்மா படக்குழுவும் பெரிதாக புரமோஷன் பணிகளை இதுவரை ஆரம்பிக்காமல் சைலன்ட் மோடுக்கு சென்றுள்ளன. கண்டிப்பாக ஆகஸ்ட் மாதத்துக்கு சிக்மா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்கின்றனர்.
சன் பிக்சர்ஸின் 'டிசி' வெளியாகுமா?: சிக்மா படம் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்து சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள டிசி திரைப்படமும் ஜூலை 31 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படமும் திட்டமிட்டப்படி வெளியாகுமா? அல்லது தள்ளிப்போகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆகஸ்ட் மாதமும் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ரிலீஸாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.