இருமொழி கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதி; அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
சென்னை: இருமொழி கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, அன்றும், இன்றும், என்றும் இருமொழி கொள்கைதான். மாற்றுக் கருத்தே கிடையாது. நீதிபதி நாகரத்னா தனது கருத்தை சொல்லி இருக்கிறார்; அது தீர்ப்பு கிடையாது. ஹிந்தி உட்பட எந்த மொழியையும் எதிர்க்கவில்லை.
தமிழக மண்ணுக்கும், மக்களுக்கும் அவர்களின் தாய்மொழியாக இருக்கக்கூடிய தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழக அரசை பொருத்தவரை, அன்றும், இன்றும், என்றும் இருமொழி கொள்கை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் செப்டம்பர் 22ம் தேதி விரிவுபடுத்தப்படும்; இந்த திட்டம் விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
இதனால் மொத்தம் 34.64 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறும் நிலை ஏற்படும். திட்டத்தின் தரம் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில் காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஒரு கமிட்டி அமைக்கப்படும்.
மாணவர்களின் ரசனைக்கும் ஊட்டச்சத்துத் தேவைக்கும் ஏற்ப பல்வேறு உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்த இந்தக் குழு ஆலோசனை வழங்கும். புழல் சிறையில் இருக்கும் சிறை கைதி கூட சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார். நமது பள்ளி குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு உள்ளது. வரும் காலத்தில் நிச்சயமாக பள்ளி குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும். இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.