📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 12:33 AM

புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கத்தில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது

புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கத்தில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது

புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கத்தில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது - ஜெயக்குமார் திட்டவட்டம்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தற்போது பொதுமக்களுக்கு பயன்பட்டு வரும் நிலையில், அதனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றுவது ஏற்புடையதல்ல என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Published : September 18, 2026 at 11:50 AM IST

சென்னை: “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க விடமாட்டோம், ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது” என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அ.தி.மு.க சார்பில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பா. வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பெண்களுக்கான உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கும், சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும் பெரியார் முக்கிய பங்காற்றினார். பெரியார் வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலங்களிலும் சமூகநீதி மற்றும் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதேபோல் பெண்களுக்கான உள்ளாட்சி இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா” என்று கூறினார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம்

தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டு மக்களும், சென்னை மக்களும், குறிப்பாக மீனவ மக்களும் புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற வேண்டும்.

அரசு அதனை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், சுமார் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தேவையா என்ற கேள்வி எழுகிறது. புதிய தலைமைச் செயலகத்திற்காக ரூ.1,200 கோடி செலவு செய்யும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை தற்போது உள்ளது என்று கூறுகிறார்கள்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தற்போது பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பயன்பட்டு வரும் நிலையில், அதனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றுவது ஏற்புடையதல்ல. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம். அங்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது. புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு பா.ம.க இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “இப்போதுதான் தேர்தல் நாமினேஷன் முடிந்திருக்கிறது. இன்னும் நேரம் இருக்கிறது. Let's wait and watch" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையன், “பணம் பலத்தால் விஜய் மிகவும் ஆட்டம் போடுகிறார், அவர் வெறும் காகிதம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் இனிமேல் அவர் ஆட்டம் மக்களிடம் எடுபடாது அவர் ஒரு செல்லாக்காசு” என்று தெரிவித்துள்ளார்.