📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 14, 2026 05:33 PM

IND vs ENG: முதல் ஒருநாள் போட்டிக்கு முன் 45 விநாடிகள் கை தட்டப்பட்டது எதற்கு? காரணம் இது தான்

IND vs ENG: முதல் ஒருநாள் போட்டிக்கு முன் 45 விநாடிகள் கை தட்டப்பட்டது எதற்கு? காரணம் இது தான்

IND vs ENG: முதல் ஒருநாள் போட்டிக்கு முன் 45 விநாடிகள் கை தட்டப்பட்டது எதற்கு? காரணம் இது தான்

பர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எட்ஜ்பாஸ்டனில் 45 விநாடிகள் கைதட்டலுடன் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான பாப் வில்லிஸின் நினைவாக, 'புளூ ஃபார் பாப்' ன் ஒரு பகுதியாக இந்த கைதட்டல் மரியாதை செலுத்தப்பட்டது.

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2019-இல் வில்லிஸ் காலமானதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2021 முதல் இங்கிலாந்தின் சொந்த மண்ணில் நடைபெறும் கோடைக்காலப் போட்டிகளில் இது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறியது. கடந்த ஆறு சீசனில், 'தி பாப் வில்லிஸ் ஃபண்ட்' மூலம் சுமார் ரூ. 28.35 கோடி அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்தத் தொகை புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள், விழிப்புணர்வு மற்றும் ஆரம்பக்கட்ட கண்டறிதலை ஊக்குவிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.இது குறித்து பேசிய பாப் வில்லிஸின் மனைவியும், 'தி பாப் வில்லிஸ் ஃபண்ட்' அமைப்பின் இணை நிறுவனருமான லாரன் கிளார்க் "பாப்பைக் கொண்டாடுவதற்கும் எங்களைப் போன்ற பிற குடும்பங்கள் துயரப்படுவதைத் தடுப்பதற்கும் ஒரு வழியாகவே 'புளூ ஃபார் பாப்' தொடங்கப்பட்டது.

இந்த இறுதி ஆண்டு, எங்களது நன்றியைத் தெரிவிப்பதற்கும், இந்த நிதியம் சாதித்த அனைத்தையும் கொண்டாடுவதற்கும், பாப்பைப் போன்ற ஒரு உயிரைக் காப்பாற்ற மக்கள் கடைசியாக ஒருமுறை நிதியளிக்குமாறு கேட்டுக்கொள்வதற்குமான ஒரு வாய்ப்பாகும்" என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் முன்னாள் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், "கிரிக்கெட் வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதி பாப் வில்லிஸ். இந்த இறுதி அஞ்சலியில் வீரர்கள் பங்கேற்பது எங்களுக்குப் பெருமையளிக்கிறது. இன்றைய தினம் ஒரு நபராவது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள அல்லது முன்கூட்டியே செயல்பட உதவினால், அதுவே அவருக்குச் செலுத்தும் மிகப்பெரிய மரியாதையாக அமையும்" என்று கூறினார்.

பாப் வில்லிஸ் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும், புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளராகவும் திகழ்ந்தவர். 1971 முதல் 1984 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 325 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சிறந்த பந்துவீச்சாளர்களின் வரிசையில் அவர் இடம்பிடித்துள்ளார்.

1981-ஆம் ஆண்டு ஹெடிங்லேயில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஷஸ் தொடரில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 43 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அவரது கிரிக்கெட் வாழ்வின் மிக உயரிய தருணமாகக் கருதப்படுகிறது. இது இங்கிலாந்து அணிக்கு ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.தனது நீண்ட ரன்-அப் மற்றும் ஆக்ரோஷமான பந்துவீச்சு பாணிக்கு பெயர் பெற்ற வில்லிஸ், ஓய்வு பெறுவதற்கு முன்பு 18 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஊடகத் துறைக்குள் நுழைந்த அவர், ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் முக்கியத் தொகுப்பாளராக மாறினார். அவரது முகபாவனையற்ற தனித்துவமான நகைச்சுவை உணர்வு, மற்றும் இங்கிலாந்து அணி மீதான நேர்மையான விமர்சனங்கள் ஆகியவற்றிற்காக அவர் அறியப்பட்டார். மேலும், அவர் பாடகர் பாப் டிலானின்தீவிர ரசிகராக இருந்ததால், தனது பெயரின் நடுவே "டிலான்" என்பதை சட்டப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.