IND vs AFG: சாம்சன் அதிரடியால் தொடரை வென்ற இந்தியா.. 7 ஆண்டுகளாக தொடரும் சாதனை
IND vs AFG: சாம்சன் அதிரடியால் தொடரை வென்ற இந்தியா.. 7 ஆண்டுகளாக தொடரும் சாதனை
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் தனது ஆதிக்கத்தை இந்தியா மீண்டும் நிலைநாட்டியுள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு இருதரப்பு டி20 தொடரைக்கூட இழந்ததில்லை என்ற வரலாற்று சாதனை தொடர்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
கடந்த சில போட்டிகளாக தடுமாறிய சஞ்சு சாம்சன் முதல் சில பந்துகளில் பொறமை காத்து பின்னர் அதிரடியை காட்டினார். சிக்சர், பவுண்டரிகளை பொளந்த அவர் 20 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதில், 4 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும். சாம்சன் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும்.
ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் தனது சுழற்பந்து வீச்சால் அதிரடி காட்டிய இவ்விரு தொடக்க வீரர்களையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போட்டார்.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரஷித் கான் வீசிய பந்தில் ஒரு சிக்சரை பறக்கவிட்டார். இருப்பினும், அதே ஓவரின் நான்காவது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ரஷித் கானின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 123 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை முன்கூட்டியே இழந்தாலும், இந்திய அணிக்கு ரன் ரேட் அழுத்தம் ஏதும் ஏற்படவில்லை. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா நிதானத்துடனும் அதே சமயம் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
குறிப்பாக முஜீப் உர் ரஹ்மான் வீசிய 14-வது ஓவரில் இஷான் கிஷன் ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசி 17 ரன்களைக் குவித்தார். இறுதியில், 14.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றியை எட்டியது. ரஷித் கான் வீசிய பந்தை இஷான் கிஷன் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெறச் செய்தார். ஆட்டத்தின் முடிவில் இஷான் கிஷன் 21 பந்துகளில் 33 ரன்களுடனும், திலக் வர்மா 11 பந்துகளில் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நூர் அகமது 2 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி 14 ரன்கள் கொடுத்தார்.